மனம் இருந்தால் மார்க்கம் உண்டு; பணம் இருந்தும் பலரும் கொரோனா காலத்தில் மக்களுக்கு உதவி செய்ய மனமில்லாத நேரத்தில் தன்மகளின் படிப்பு செலவிற்காக சேமித்து வைத்திருந்த பணத்தை எடுத்து உதவி செய்த நேத்ராவையும் அவரது குடும்பத்தையும் மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டினார். அப்படிபாராட்டப்பட்டவர் பாஜகவில் இணைந்துள்ளார்.

மதுரை மேலமடை பகுதியைச் சேர்ந்த சலூன் கடைக்காரர் மோகன். இவர் தனது மகள் நேத்ராவின் படிப்பு செலவுக்காக சேமித்து வைத்திருந்த பணத்தில் கொரோனா காலத்தில் பலருக்கு உதவி செய்தார். இவரது செயலை கடந்த மே மாதம் ‛மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டினார். இதையடுத்து மோகன் குடும்பத்துடன் மதுரை மாநகர் மாவட்ட பாஜ., தலைவர் கே.கே.சீனிவாசன் முன்னிலையில் பாஜ.,வில் உறுப்பினராக இணைந்ததாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதனை மறுத்த மோகன், 'நான் பாஜ.,வில் சேரவில்லை என மறுத்தார். 


இந்தநிலையில் 3 மாதங்களுக்கு பிறகு மோகன், மனைவி மற்றும் மகளுடன் பாஜக மாநில பொதுச் செயலர் சீனிவாசன், மதுரை புறநகர் மாவட்டத் தலைவர் மகா சுசீந்திரன் ஆகியோர் முன்னிலையில் பாஜ.,வில் இணைந்தார். அவருக்கு சீனிவாசன் உறுப்பினர் அட்டை வழங்கினார். சீனிவாசன் கூறுகையில், ‛மன் கி பாத் நிகழ்ச்சியில் மோகனை பிரதமர் பாராட்டினார். அப்போது அவர் பாஜ.,வில் இணைய முன்வந்த நிலையில், சிலரின் அச்சுறுத்தல் காரணமாக அவர் பாஜ.,வில் இணையவில்லை. இப்போது 300 பேருடன் அவர் பாஜ.,வில் இணைந்துள்ளார். மேலும், தமிழகம் முழுவதும் முடி திருத்தும் தொழிலில் உள்ள 6 ஆயிரம் பேரை கட்சியில் இணைக்க அவர் முடிவு செய்துள்ளார்,' என்றார்.