salman kurshith and dhave will be appear for dinakaran
18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கத்தை எதிர்த்து தினகரன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவுள்ளது. இந்த வழக்கில் தினகரன் தரப்பில் ஆஜராக மூத்த வழக்கறிஞர்கள் சல்மான் குர்ஷித், துஷ்யந்த் தவே ஆகியோர் தில்லியில் இருந்து வருகிறார்கள்.
இருவரில் சல்மான் குர்ஷித் காங்கிரஸை சேர்ந்தவர். மூத்த வழக்கறிஞர். மத்திய அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். தினகரன் தங்கள் தரப்பில் நியமித்துள்ள வழக்கறிஞர் காங்கிரஸை சேர்ந்தவர். இது ஒருபுறம் இருக்க, ஏற்கெனவே கோடி ரூபாய் கொடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தங்கள் தரப்பில் ஆஜராக திமுக.,வின் செயல் தலைவர் ஸ்டாலினால் டெல்லியிலிருந்து இருந்து அழைத்து வரப்பட்டவர், இதே போன்ற பின்னணி கொண்ட முன்னாள் மத்திய அமைச்சரும் வழக்கறிஞருமான கபில் சிபல்.
பேரவையில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களைக் கொண்டு வந்தது தொடர்பாக சபை உரிமை மீறல் குழுவால் நடவடிக்கைக்கு உள்ளான திமுக., உறுப்பினர்களுக்காக நீதிமன்றத்தில் வாதிட்டவர் கபில் சிபல்.
இதே போன்ற நிலையில் தங்கள் தரப்பு எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதில் மிகவும் அப்செட் ஆன தினகரன், மீண்டும் தேசிய அளவில் திறமையும் முந்தைய வழக்குகளின் தன்மையும் அறிந்துள்ளவர் என்ற வகையில் காங்கிரஸின் சல்மான் குர்ஷித்தை நாடியுள்ளார்.
தினகரன் தரப்பில் ஆஜராக அவர் நாடியுள்ள இன்னொரு வழக்கறிஞர் குறித்த செய்திதான் பலருக்கும் மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர், தவே. இந்தப் பெயர் அதிமுக., வட்டாரத்தில் மட்டுமல்ல, ஜெயலலிதாவின் வருமானத்துக்குப் பொருந்தாத சொத்துக் குவிப்பு குறித்த கர்நாடக அரசின் வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் கர்நடக அரசு வழக்கறிஞராகவும் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கு எதிராகவும் ஆஜரானவர் துஷ்யந்த் தவே.
இந்த இருவரும் 18 பேரின் தகுதி நீக்க விவகாரத்தில் என்ன செய்யப் போகிறார்கள் என்பது, நாளை உயர் நீதிமன்றத்தில் வரும் வழக்கின் விசாரணையில் தெரியவரும்!
