”எங்க ஊர்க்காரர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கலாம்! அதுக்காக அவர்....” என்று நறுக்கு விமர்சனத்தை வைத்திருக்கிறார் வளர்மதி. 

சேலம் பெரியார் பல்கலைக்கழக மாணவி வளர்மதி. நெடுவாசல் மற்றும் கதிராமங்கலம் போராட்டங்களுக்கு ஆதரவாக துண்டு பிரசுரத்தை வினியோகித்து மாணவர்களை தூண்டினார் என்று கடந்த ஜூலை மாதம் சேலம் போலீஸார் இவரை கைது செய்தனர். பின், தேச நலனுக்கு எதிராக செயல்பட்டார் என்று கூறி அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கோவை சிறையில் அடைத்தது காவல்துறை. 

வளர்மதியின் தந்தை மாதையன் சென்னை உயர்நீதி மன்றத்தில் இதை எதிர்த்து ஒரு மனுவை பதிவு செய்தார். இதை தீர விசாரித்த நீதிபதிகள் வளர்மதி மீதான அந்த குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்தனர். இதைத்தொடர்ந்து கடந்த 7_ம் தேதி மாலையில் விடுதலையாகி சிறை மீண்டார் வளர்மதி.  

சேலம் நோக்கி அமைதியான பயணத்தை மேற்கொள்வார் அவர்! என்று எல்லோரும் நினைத்திருக்க, வெளியே வந்த மாத்திரத்தில் சிறை வாசலில் திரண்டிருந்த ‘மாணவர் எழுச்சி இயக்கத்தினர் ’ உடன் இணைந்து அனிதா தற்கொலைக்கு நியாயம் கேட்டு போராடியபோது தமிழகமே விக்கித்து நின்றது. அதன் பிறகு வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தில் கலந்து கொண்டு அசத்தினார் வளர்மதி. ஆனானப்பட்ட கமல்ஹாசனே வளர்மதியின் சிறை மீள்வை வாழ்த்தி! தன் அரசியலை அப்டேட் செய்து கொண்டார். 

இந்நிலையில் ஒரு மீடியாவுக்கு பேட்டி கொடுத்திருக்கும் வளர்மதி பாரபட்சமில்லாமல் தன் குமுறல்களை கொட்டியிருக்கிறார். அதில்...”சமூகத்தில் மிக இழிவான தொழில்களையும், மிக இழிவான வேலைகளையும் செய்யக்கூடிய நபர் மீது போடப்படுகிற குண்டர் சட்டத்தை என் மீது போட்டிருக்காங்களே! சமூக  நன்மைக்கு போராடுனதுக்கு கிடைச்ச பரிசா இது அப்படின்னு வருத்தப்பட்டேன். 

என் கோபம் யார் மீது? நான் எதிர்க்கிறது மத்திய அரசையா ? அல்லது மாநில அரசையா?ன்னு கேட்கிறாங்க. ஆனா எனக்கு ஒரு கேள்வி, இன்னைக்கு இந்த தமிழகத்துல மாநில அரசுன்னு ஒண்ணு இருக்குதா?. எங்க ஊர்க்காரர் தமிழக முதலமைச்சரா இருக்கிறார் அப்படிங்கிறதுக்காக அவர் மீதான விமர்சனங்களை சொல்லாம இருக்க முடியுமா?

நிச்சயமா போராட்டங்களால் மட்டுமே இந்த மாநிலத்தின், தேசத்தின் அவலங்களை மாற்றிட முடியும்.” என்று வரிக்கு வரி வெடி வார்த்தைகள் கூறி தெறிக்க விட்டிருக்கிறார். 
எங்கேயோ புகையுதே!?....