ராஜஸ்தான் துணை முதல்வர் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் முதல்வர் அசோக் கெலாட் 100 எம்எல்ஏக்களின் பலத்தை காட்டியுள்ளார்.

எம்எல்ஏக்கள் கூட்டத்தை புறக்கணித்த சச்சின் பைலட், பாஜகவில் இணையவில்லை என்றும் தெரிவித்துள்ளார். அதேபோல், தனக்கு ஆதரவாக 30 எம்எல்ஏக்கள் உள்ளதாக அவர் கூறிய நிலையில், 10 எம்எல்ஏக்கள் மட்டுமே அவருடன் உள்ளதாக தெரிகிறது. எங்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ளுங்கள், உங்களுக்காக கதவுகள் திறந்திருக்கிறது, குறைகளைத் பேசித் தீர்க்க முடியும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. 

மொத்தமுள்ள 107 காங்கிரஸ் எம்எல்ஏக்களில், 97 எம்எல்ஏக்கள் ஜெய்ப்பூரில் உள்ள முதல்வர் இல்லத்திற்கு வருகை தந்துள்ளனர். 2 அமைச்சர்கள் மாயமாகியுள்ளனர். இதைத்தொடர்ந்து, சச்சின் பைலட்டிற்கு ஆதரவாக 10 எம்எல்ஏக்களுக்கு மேல் பலம் இல்லை என காங்கிரஸ் தரப்பு தெரிவிக்கின்றன. ராஜஸ்தான் சட்டப்பேரவையில், மொத்தமுள்ள 200 இடங்களில் பெரும்பான்மைக்கு 101 இடங்கள் தேவை. 

பாஜகவில் இணைவதற்காக அக்கட்சியின் தலைவர் ஜெ.பி.நட்டாவை சச்சின் பைலட் இன்று சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் அதனை அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். அவரும் ஜோதிராதித்யா வழியில் தனது அரசியல் பலத்தை தக்க வைத்துக்கொள்வார் என்று பரவலாக கூறப்பட்டது. 
கடந்த மார்ச் மாதத்தில், ராகுல் காந்திக்கு நெருக்கமானவரான ஜோதிராதித்திய சிந்திய மத்திய பிரதேசத்தில் 22 ஆதரவு எம்எல்ஏக்களுடன் பாஜகவில் இணைந்ததன் மூலம் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்து, பாஜகவை மீண்டும் ஆட்சிக்கு வர செய்தார். 

அதேபோல், தற்போது ராகுல் காந்திக்கு நெருக்கமானவரான சச்சின் பைலட், முதல்வர் பதவி மறுக்கப்பட்டதை தொடர்ந்து, பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவித்தன. காங்கிரஸ் தரப்பில் நேற்று நள்ளிரவில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி தலைமையில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதாக 109 எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. 

ராஜஸ்தான் சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 200 இடங்களில் 107 இடங்களை காங்கிரஸ் கொண்டுள்ளது. இதற்கும் மேலாக 10 சுயேட்சை எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது. இதனிடையே, அசோக் கெலாட்டிற்கு ஆதரவு தெரிவிக்கும் ராஷ்டிரிய லோக் தளம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் பாரதிய பழங்குடியினர் உள்ளிட்ட கட்சிகள் கட்சி தாவதற்கு ரூ.15 கோடி வரை பேரம் பேசப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளன.