ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை நாளை திறக்கப்படுகிறது. கடுமையான கட்டுப்பாடுகளுடன், தினமும், 250 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.பம்பயைில் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.


கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கேரளாவில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருவதால் அதனை கட்டுப்படுத்த அரசு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.இருப்பினும் ஊரடங்கு தளர்வுகளையொட்டி, பல்வேறு பாதுகாப்பு விதிமுறையுடன் கோவில்களில் சுவாமி தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. நோய் தொற்றால் கடந்த 7 மாதங்களாக சபரிமலையில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. இந்நிலையில் ஐப்பசி மாத பூஜைகளுக்காக, நாளை மாலை, 5:00 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. ஐந்து நாட்கள் நடை திறந்திருக்கும். தினமும், 250 பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் கட்டாயமாக, மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்ட முக்கிய சுகாதார நடவடிக்கையை பின்பற்ற வேண்டும். இதற்காக, 48 மணி நேரத்துக்கு முன் எடுக்கப்பட்ட, 'கொரோனா இல்லை' என்பதற்கான உறுதிசெய்யப்பட்ட சான்றிதழுடன் செல்ல வேண்டும்.இது போன்ற கட்டுப்பாடுகள் இருந்தும், முன்பதிவு துவங்கிய சில நிமிட நேரங்களுக்குள் முடிந்து விட்டது. மொத்தம் 1,250 பக்தர்கள் சபரிமலை செல்ல தயாராகி உள்ளனர். நாளை மாலை, 5:00 மணிக்கு மேல்சாந்தி சுதிர் நம்பூதிரி, நடை திறந்து தீபம் ஏற்றுவார். தந்திரி கண்டரரு ராஜீவரரு, பிரசாதம் வழங்குவார். இரவு, 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். நாளை மறுநாள் அதிகாலை, 5:00 மணி முதல், மதியம், 1:00 மணி வரையிலும், மாலை, 5:00 முதல் இரவு, 10:00 மணி வரையிலும் நடை திறந்திருக்கும். அக்., 21 இரவு, 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.


பக்தர்கள் பம்பையில் குளிக்க முடியாது. சுவாமி ஐயப்பன் ரோட்டை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆங்காங்கே கைகழுவ சோப்பு, தண்ணீர் வசதி செய்யப்பட்டுள்ளது. நெய் பக்தர்களிடம் வாங்கி அபிஷேக நெய் பிரசாதம் வழங்கப்படும். பின், அப்பம், அரவணை வாங்கி விட்டு பம்பை திரும்பி விட வேண்டும்.கோயில் முன்புறம் உள்ள, முதல் மற்றும் கடைசி வரிசைகளில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.