நான் சபாநாயகராக தான் என் பணியை செய்கிறேன். ஆனால் நான் பிறந்த சமுதாயத்தை வைத்து என்னை திமுகவினர் மதிப்பதாக எனக்கு வேதனை தருகிறது என்று சபாநாயகர் தனபால் வேதனையுடன் தெரிவித்தார்.

ஒரு சிலவற்றை தெரிவிக்கிறேன். மிக மிக மனவேதனையுடன் இதை பதிவு செய்கிறேன். இதை தவிர்க்கலாம் என்று நினைத்தாலும் மனவேதனை இதை பதிவு செய்ய சொல்கிறது. என்னை பதவியை வைத்து பார்க்காமல் எனது பிறந்த நிலையை வைத்து பார்க்கும் நிலை வேதனை அடைய வைத்துள்ளது. 

மிகமிக தாழ்த்தப்பட்ட சாதாரண குடும்பத்திலே பிறந்த என்னை கைகொடுத்து தூக்கிவிட்ட மாண்புமிகு இதயதெய்வம் அம்மா அவர்கள் . இந்திய சுதந்திர நாட்டு வரலாற்றில் ஒரு தாழ்த்தப்பட்ட அருந்ததியர் இனத்தை சேர்ந்த என்னை உயர்ந்த இடத்தில் வைத்து அழகு பார்த்தவர் அம்மா. அவ்வாறு வந்த நான் பேரவை தலைவர் என்ற முறையில் செயல்பட்டேன். ஆனால் என்னை பேரவை தலைவராக பார்க்காமல் தாழ்த்தப்பட்ட சமுதாய எண்ண ஓட்டத்தில் நடப்பதாகவே நான் கருதுகிறேன். 

திட்டமிட்டு பிரச்சனை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் திமுகவினர் வந்துள்ளனர். திமுகவினர் , காங்கிரசார் எதிர்த்து வாக்களித்திருந்தாலும் , மற்றவர்களை சேர்த்தாலும் இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 122 பேர் உள்ளனர். 

அவர்கள் இருந்து எதிர்த்து வாக்களித்திருந்தாலும் இந்த தீர்மானம் வெற்றி பெற்றிருக்கும். ஆகவே அவர்கள் செய்கிற அரசியலுக்கும் எனக்கும் பொறுப்பில்லை. நான் விதிகளின்படித்தான் செயல்பட்டேன். 

நான் மன ஆதங்கத்தை வெளியிட வேண்டும் என்ற அடிப்படையில் இந்த அறிக்கையை வெளியிடுகிறேன். நான் இந்த பிரச்சனையில் அவர்கள் எவ்வளவு தூரம் என்னை கேவலமாக நடத்தினார்கள் எனபதை மறந்துவிடத்தான் நினைத்தேன். ஆனால் வெளியில் சென்று பேட்டி கொடுக்கிறார்கள். ஆகவேத்தான் இந்த பேட்டியை கொடுக்கிறேன்.

இந்த பிரச்சனையை இத்துடன் முடித்து வைக்கிறேன். இவ்வாறு தனபால் தெரிவித்தார்.