சாத்தான்குளத்தில் தந்தை - மகன் மரணமடைந்த விவகாரத்தில்  சாத்தான்கள் உடனடியாக கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று நடிகர் விஜயின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். 
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகள் ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் இருவரும் ஊரடங்கு விதிகளை மீறியதாக போலீஸார் கைது செய்தனர். இருவரையும் விசாரணைக்குப் பிறகு நீதிபதியிடம் ஆஜப்படுத்தி கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர். ஆனால், சிறையில் அடைக்கப்பட்ட இருவரும் அடுத்தடுத்து மரணடைந்தனர்.  இந்தச் சம்பவம் தமிழகம் மட்டுமல்லாமல், நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரித்துவருகிறது. இந்த சம்பவத்துக்கு பிரபலங்கள் பலரும் தங்கள் கண்டனத்தை தெரிவித்துவருகிறார்கள்.
இந்நிலையில் இந்த விவகாரம் பற்றி நடிகர் விஜயின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகரன் வீடியோ வெளியிட்டுள்ள தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். அதில், “கொரோனாவை கொடிய வைரஸ் என்கிறார்கள். அந்த வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்கள் கூட பலர் உயிருடன் திரும்பி வந்துவிடுகிறார்கள். சாத்தான்குளம் சம்பவத்தை கேள்விப்படும்போது, இப்படிப்பட்ட போலீசாரிடம் மாட்டிக் கொண்டால் என்ன ஆவது என்று நினைத்துப் பார்க்கும் போது ஈரக்கொலை நடுங்குகிறது.


இந்த கொரோனா காலத்தில் எத்தனை போலீஸ்காரர்கள் கடவுளுடைய பிரதிநிதிகளாக வேலை செய்தார்கள். அதை மறக்கவும் முடியாது. மறுக்கவும் கூடாது. அப்படிப்பட்ட போலீஸ் துறையில் இப்படிப்பட்ட கொடுமைக்காரர்களா? இந்த சாத்தான்கள் உடனடியாக கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். இவர்களை காப்பாற்ற நினைக்கும் யாரையும் மக்கள் மன்னிக்கமாட்டார்கள்” என்று வீடியோவில் எஸ்.ஏ.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.