தமிழர்கள்தான் சோறு போட்டார்கள் என்று சொல்லி விட்டு தமிழர்களுக்கு துரோகமான கருத்துக்களை சொல்லியிருக்கிறார் ரஜினி என்று இயக்குநரும் நடிகர் விஜயின் தந்தையுமான எஸ்.ஏ. சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற கமலின் ‘உங்கள் நான்’ நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரின் பேச்சு ஹைலைட் ஆனது. “அரசியலில் ரஜினியும் கமலும் இணைய வேண்டும். இருவரும் அரசியலில் இணைந்தால் அவருக்குப் பின்னால் நாங்கள் அணி திரள தயாராக உள்ளோம். எதிர்காலத்தில் தம்பிகள் அரசியலுக்கு வரும்போது, அவர்களுக்கு வழிவிட வேண்டும்” என்று தெரிவித்தார். எஸ்.ஏ. சந்திரசேகரின் இந்தப் பேச்சுக்கு பிறகே, “தேவைப்பட்டால் நானும் கமலும் அரசியலில் இணைவோம்” என்று ரஜினியும் கமலும் பரஸ்பரம் அறிவித்தனர்.


இந்நிலையில் நடிகர் ரஜினியால் ஏமாற்றமே மிஞ்சியதாக எஸ்.ஏ. சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “ரஜினியைப் பற்றி பேச விரும்பவில்லை. ஒரு நாள் ஆன்மீக அரசியல் என்று பேசும் ரஜினி, அடுத்து எம்.ஜி.ஆர் ஆட்சி என்கிறார். தமிழர்கள்தான் எனக்கு சோறு போட்டார்கள் என்று ஒரு நாள் பேசுகிறார். பிறகு தேசியம் பற்றிப் பேசுகிறார். கமலும் ரஜினியும் இணைய வேண்டும் என்று நான்தான் முன்பு கூறினேன். 
ஆனால், அப்படி சொன்னதற்காக இப்போது வருத்தப்படுகிறேன். தமிழர்கள்தான் சோறு போட்டார்கள் என்று சொல்லி விட்டு தமிழர்களுக்கு துரோகமான கருத்துக்களை சொல்லியிருக்கிறார் ரஜினி. அதற்கு இன்னொருத்தர்(கமல்) மறுப்பே சொல்லாமல் அமைதியாக இருக்கிறார். இவர்கள் அங்கேயே காம்ப்ரமைஸ் ஆகிவிட்டார்கள். அவர் சொல்லும்போது இவர் என்ன செய்திருக்க வேண்டும். சைலன்ட்டாக இருக்கிறார். இவர்கள் இணைந்தால் என்னாகும்?” என்று தெரிவித்துள்ளார்.
எஸ்.ஏ.சந்திரசேகரின் இந்தப் பேச்சு தமிழ் சினிமா வட்டாரத்திலும் அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை கிளப்பியுள்ளது. மூன்று மாதங்களுக்கு முன்பு ரஜினி-கமல் இணைய வேண்டும் என்று பேசிய எஸ்.ஏ. சந்திரசேகர், இப்போது ஏன் பல்டியடித்தார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.