ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மாவட்ட தலைவர் மற்றும் ஒன்றிய தலைவர் பதவிகளில் காங்கிரசுக்கு திமுக போதுமான இடம் ஒதுக்கவில்லை என்கிற காங்கிரஸ் கட்சியின் புகாரில் உண்மை இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு மாவட்ட ஊராட்சி தலைவர் பதவி கூட தங்களுக்கு ஒதுக்காது கூட்டணி தர்மத்தை மீறிய செயல் என்று திமுகவிற்கு எதிராக அழகிரி கொதித்து போய் இருந்தார். அதாவது திமுக தங்களுக்கு ஒரு இடம் கூட ஒதுக்கவில்லை என்று அழகிரி கூறியிருந்தார். அழகிரி கூறியபடியே திமுக ஒரு மாவட்ட தலைவர் பதவியை கூட காங்கிரசுக்கு வழங்கவில்லை. அதே சமயம் பாமகவோ, முதலமைச்சரின் சொந்த மாவட்டமான சேலம் மாவட்ட தலைவர் பதவியை கூட்டணி கட்சியான பாமகவிற்கு கொடுத்திருந்தது.

இது குறித்து விசாரித்த போது, காங்கிரஸ் கட்சிக்கு விருதுநகர், புதுக்கோட்டை உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களை ஒதுக்குமாறு திமுக தலைமை, மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இது குறித்தத பேச்சுவார்த்தையின் போது, கவுன்சிலர்களை கவனிக்கவேண்டிய பொறுப்பு காங்கிரஸ் வேட்பாளருக்குத்தான் என்று மாவட்டச் செயலாளர்கள் கூறியுள்ளனர். அதற்கு திமுக கவுன்சிலர்களை கவனிக்க முடியாது, வெளியே இருந்து ஆதரவு வேண்டும் என்றால் மாற்று கட்சியினரை கவனிக்க மட்டுமே காங்கிரஸ் வேட்பாளர் தரப்பில் ஓகே சொன்னதாக சொல்கிறார்கள்.

இதனை ஏற்க திமுக மாவட்டச் செயலாளர்கள் மறுத்துள்ளனர். ஒவ்வொரு கவுன்சிலரும் தலா 15 லட்சம் ரூபாய் வரை செலவழித்து வென்றுள்ளனர். அவர்களுக்கு அந்த தொகையை திமுக சார்பில் போட்டியிடும் மாவட்ட தலைவர் வழங்க சம்மதித்துள்ளார். தவிர மாற்றுக் கட்சியினருக்கும் கொடுக்க வேண்டியுள்ளது. எனவே கவனிக்க வேண்டிய முறையில் கவனித்தால் மட்டுமே காங்கிரசுக்கு மாவட்ட தலைவர் மற்றும் ஒன்றிய தலைவர், ஓசியாக திமுக தங்கள் வாக்குகளை வழங்காது என்று கூறியுள்ளனர்.

தங்கள் காசை செலவழித்து காங்கிரஸ் வேட்பாளரை ஏன் ஜெயிக்க வைக்க வேண்டும் என்று திமுக தலைமைக்கு மாவட்டச் செயலாளர்கள் புகாரை தட்டியுள்ளனர். இது குறித்து அதற்கு மேல் பேச ஒன்றும் இல்லை என்பதால் திமுக தலைமை இந்த விவகாரத்தில் தலையிடவில்லை. காசு செலவழிக்காமல் எப்படி மாவட்ட தலைவர், ஒன்றிய தலைவர் பதவியை பெற்றுத் தர முடியும். காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு தங்கள் பணத்தையா செலவழிக்க முடியும் என்கிற மாவட்டச் செயலாளர்களின் லாஜிக்கான கேள்விதான் இந்த பிரச்சனைக்கு காரணமாகியுள்ளது.

அதாவது பதவியும் வேண்டும் பணம் செலவழிக்கமாட்டோம் என்கிற ரீதியில் காங்கிரஸ் வைத்த விநோத கோரிக்கை தான் அனைத்து இடங்களையும் திமுக எடுத்துக் கொண்டதற்கு முக்கிய காரணமாம். எனவே திமுக கூட்டணி தர்மத்தோடு நடந்ததாகவும் காங்கிரஸ் தான் அதனை கெடுத்துவிட்டதாகவும் திமுக தரப்பு விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிறது.