உதயநிதி கருத்திற்கு வலு சேர்த்த ஆர்எஸ்எஸ் தலைவர்.! சமூகத்தில் பாகுபாடுகள் இருக்கும் வரை இடஒதுக்கீடு அவசியம்
சமூக அமைப்பில் சக மனிதர்களைப் பின்தங்கிய நிலையில் நாம் வைத்திருக்கிறோம். அவர்களை நாம் பொருட்படுத்தவுமில்லை.அவர்களைப் பற்றி எல்லாம் கவலைப்படுவதும் இல்லை. இது போன்ற நடவடிக்கை 2,000 ஆண்டுகாலமாக இருந்து வருகிறது என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி, சனாதனத்தை எதிர்ப்பதை விட ஒழிப்பதே சரியாகும். சனாதனம், சமத்துவத்துக்கும், சமூக நீதிக்கும் எதிரானது. சனாதனம் என்றால் நிலையானது என அர்த்தம். அதாவது மாற்ற முடியாதது என்றும் சொல்லலாம். எல்லாவற்றையும் மாற்ற வேண்டும், எதையும் கேள்வி கேட்க வேண்டும் என உருவானது தான் திராவிட இயக்கமும், கம்யூனிச இயக்கமும் என தெரிவித்திருந்தார். இந்த கருத்து பாஜக மற்றும் இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து காவல்நிலையத்தில் வழக்கும் தொடரப்பட்டது. மத்திய அமைச்சர்களும் உதயநிதிக்கு எதிராக கருத்தை தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கருத்து தெரிவித்த உதயநிதி, பல ஆண்டுகளுக்கு முன் பெண்கள் படிக்கக்கூடாது என்று கூறினார்கள், பெண்கள் மேலாடை அணியக்கூடாது என்று கூறினார்கள், கோயில்களுக்குள் செல்லக்கூடாது என்றார்கள். இந்த மூன்றையும் நாம் மாற்றி இருக்கிறோம். இதுதான் திராவிட மாடல் என குறிப்பிட்டார். இந்தநிலையில் நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது பேசிய அவர், சமூக அமைப்பில் சக மனிதர்களைப் பின்தங்கிய நிலையில் நாம் வைத்திருக்கிறோம். அவர்களை நாம் பொருட்படுத்தவுமில்லை.அவர்களைப் பற்றி எல்லாம் கவலைப்படுவதும் இல்லை.
இது போன்ற நடவடிக்கை 2,000 ஆண்டுகாலமாக இருந்து வருகிறது. எனவே அவர்களுக்கும் சமத்துவம் கிடைக்க வேண்டும். அதுவரை இடஒதுக்கீடு போன்ற சில சலுகைகள் தொடர வேண்டும். அதில் இடஒதுக்கீடும் ஒன்று, அரசியல் சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள இடஒதுக்கீடுகளுக்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பிலிருந்து நாங்கள் முழு ஆதரவையும் வழங்குகிறோம். மேலும், இடஒதுக்கீடு என்பது வெறுமனே பொருளாராதர அல்லது அரசியல் சமத்துவத்தை உறுதி செய்வது மட்டுமல்ல, மரியாதை அளிப்பதும் கூட என்று மோகன் பகவத் கூறினார்.