முக்கிய தலைவர்களின் சிலைகள், பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்-ன் தூண்டுதலால் உடைக்கப்படுவதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

திரிபுராவில் அண்மையில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து, புரட்சியாளர் லெனின் சிலை பாஜகவினரால் அகற்றப்பட்டது. பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, தமிழகத்தில் பெரியார் சிலை அகற்றப்படும் என்று டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அரசியல் தலைவர்களின் சிலைகள் உடைக்கப்பட்டன. 

இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே நேற்று இரவு பெரியார் சிலையின் தலைப்பகுதி மர்ம நபர்களால் உடைக்கப்பட்டது. சிலையின் தலைப்பகுதி முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரியார் சிலை உடைக்கப்பட்டதற்கு, திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது டுவிட்டர் பக்கத்தில், திரிபுராவில் சிலைகள் உடைக்கப்பட்டபோது அதை ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக உறுப்பினர்கள் ஆதரித்தனர். 

அதைத் தொடர்ந்து கொள்கைகளை எதிர்க்கும் பெரியார் போன்ற சமூக சீர்திருத்தவாதிகள், தலித்துகளின் உரிமைகளுக்காக போராடியவர்களின் சிலைகளை உடைக்குமாறு தங்களது ஆதரவாளர்களை அவர்கள் ஏவி விடுகின்றனர். தற்போது பெரியாரின் சிலை தமிநாட்டில் உடைக்கப்பட்டுள்ளது என்று ராகுல் காந்தி
பதிவிட்டுள்ளார்.