அந்த மக்களுக்கு திராவிட இயக்கம் போட்ட பிச்சை! வன்கொடுமை சட்டத்தில் கைதான ஆர்.எஸ் பாரதியின் அடாவடி பேச்சு..!
ஓப்பனா சொல்றேன். ஒரு ஹரிஜன்கூட மத்தியப் பிரதேசத்தில ஹைகோர்ட் ஜட்ஜ் கிடையாது. தமிழ்நாட்டில் கலைஞர் ஆட்சிக்கு வந்த பிறகு வரதராஜனை உட்கார வைத்தார். அதற்குப் பிறகு ஏழெட்டு ஆதிதிராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள் ஜட்ஜாக இருந்தார்கள் என்றால், அது திராவிட இயக்கம் போட்ட பிச்சை.
திமுகவின் அமைப்புச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ் பாரதி தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து அவதூறாக பேசியதற்காக இன்று அதிகாலையில் கைதாகி இருக்கிறார். கடந்த பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் தலித் மக்கள் தொடர்பாக ஆர்.எஸ் பாரதி பேசிய பேச்சு பலத்த சர்ச்சையை கிளப்பியது. தலித் மக்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசிய ஆர்.எஸ். பாரதியை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகளும் புகார் மனுக்களும் கொடுக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் இன்று அதிகாலை அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஆர்.எஸ் பாரதியின் கைதுக்கு காரணமாகி இருக்கும் பேச்சு என்ன என்பதை காண்போம்.
3 மாதங்களுக்கு முன்பாக சென்னை அன்பகத்தில் நடந்த கலைஞர் வாசகர் வட்ட விழாவில் கலந்து கொண்டு பேசிய ஆர்.எஸ் பாரதி நீதிபதிகள் நியமனம் குறித்து சில கருத்துக்களை தெரிவித்தார். அவர் கூறும்போது, ‘தி.மு.க. ஒழிந்தால்தான் தமிழ்நாட்டுக்கு விமோசனம் என எச். ராஜா பேசுவதற்கு அந்த தைரியத்தைத் தந்தது யார்? நாமெல்லாம் கோழைகளாகிவிட்டோம். இந்தியாவிலேயே தமிழகம் தலைசிறந்த மாநிலமாக இருக்கிறதென்று சொன்னால் அதற்கு திராவிட இயக்கம்தான் காரணம். வட மாநிலத்துல இருக்குறவனுக்கு அறிவே கிடையாது. ஓப்பனா சொல்றேன். ஒரு ஹரிஜன்கூட மத்தியப் பிரதேசத்தில ஹைகோர்ட் ஜட்ஜ் கிடையாது. தமிழ்நாட்டில் கலைஞர் ஆட்சிக்கு வந்த பிறகு வரதராஜனை உட்கார வைத்தார். அதற்குப் பிறகு ஏழெட்டு ஆதிதிராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள் ஜட்ஜாக இருந்தார்கள் என்றால், அது திராவிட இயக்கம் போட்ட பிச்சை’ என்றார்.
மேலும் தொலைக்காட்சி ஊடகங்கள் குறித்து சர்ச்சையான கருத்துக்களை பேசினார். அதில். ‘இந்த டிவிகாரனுக இருக்கானுக பாருங்க.. அவனுக மாதிரி அயோக்கியனுக உலகத்திலேயே எவனும் கிடையாது. பம்பாயில இருக்க ரெட் லைட் ஏரியா மாதிரி நடத்துறானுக கம்பனிய.. காசு வருதுங்கிற காரணத்துக்காக எதை வேணும்னாலும் கிளப்பிவிடுறது’ என்றார். இதுவும் பலத்த கண்டங்களை பெற்றது. ஆர்.எஸ் பாரதியின் பொறுப்பற்ற பேச்சிற்கு திமுக தலைவர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல்வேறு தரப்பில் இருந்தும் கூறப்பட்டிருந்தது. அவர் மீது காவல்துறையிலும் புகார்கள் அளிக்கப்பட்டு வந்தன.
இதைத்தொடர்ந்து தனது பேச்சிற்கு வருத்தம் தெரிவித்த ஆர்.எஸ் பாரதி, பிப்ரவரி 14ம் தேதி சென்னை அன்பகத்தில், கலைஞர் வாசகர் வட்டம் சார்பாக நடந்த நிகழ்ச்சியில் நான் பேசிய சில வார்த்தைகள் தாழ்த்தப்பட்ட மக்கள் மனதை புண்படுத்தியதாக அறிகிறேன். அதற்காக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். என்னுடைய நோக்கம் தாழ்த்தப்பட்ட மக்கள் மனதை புண்படுத்துவது அல்ல. கலைஞர் அம்மக்களுக்காக செய்த நலத்திட்டங்களை எடுத்து கூறுவதே ஆகும்’ என்று குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் தான் இன்று அதிகாலையில் சென்னை ஆலந்தூரில் இருக்கும் வீட்டில் வைத்து ஆர்.எஸ். பாரதி கைதாகி இருக்கிறார். அவர் மீது மீது தேனாம்பேட்டை போலீசார் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.