என்னை கொரோனா பரிசோதனைக்கு அனுப்புங்க..! நீதிபதியிடம் கதறிய ஆர்.எஸ்.பாரதி..!
நீதிபதியிடம், தனக்கு சளி மற்றும் இருமல் இருப்பதால் கொரோனா பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும் எனவும் தனது மகன் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் பணியாற்றி வருவதாகவும் ஆர்.எஸ்.பாரதி கூறியிருக்கிறார்.
திமுகவின் அமைப்புச் செயலாளராக இருப்பவர் ஆர்.எஸ் பாரதி. மாநிலங்களவை உறுப்பினரான இவர் கடந்த பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். அதாவது தலித் மக்கள் தலித் மக்கள் இன்று நீதிபதியாக முடியும் என்றால் அது திராவிட இயக்கங்கள் போட்ட பிச்சை என்று கூறியிருந்தார். ”தமிழ்நாட்டில் கலைஞர் ஆட்சிக்கு வந்த பிறகு வரதராஜனை நீதிபதி ஆக்கியிருந்தார். அதற்குப் பிறகு ஏழெட்டு ஆதிதிராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள் ஜட்ஜாக இருந்தார்கள் என்றால், அது திராவிட இயக்கம் போட்ட பிச்சை” என்று பேசினார்.
அவரது இந்த பேச்சு பலத்த சர்ச்சையை கிளப்பியது. தலித் மக்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசிய ஆர்.எஸ். பாரதியை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகளும் புகார் மனுக்களும் கொடுக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் ஆதித்தமிழர் மக்கள் கட்சித் தலைவர் அளித்த புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இன்று அதிகாலை அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். சென்னை ஆலந்தூரில் இருக்கும் அவரது இல்லத்தில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சென்று கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்து சென்று ஆர்.பாரதியிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின் எழும்பூர் நீதிமன்ற நீதிபதி நாகராஜன் வீட்டிற்கு அவரை அழைத்துச் சென்ற போலீசார் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதியிடம், தனக்கு சளி மற்றும் இருமல் இருப்பதால் கொரோனா பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும் எனவும் தனது மகன் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் பணியாற்றி வருவதாகவும் கூறினார். இதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்த இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக ஆர்.எஸ்.பாரதி கைதான தகவல் அறிந்து ஏராளமான திமுக வழக்கறிஞர்களும் தொண்டர்களும் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.