திமுக அமைப்பு  செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது நடவடிக்கையை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் உட்பட 96 பேர் மீது போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

கடந்த பிப்ரவரி மாதம் 14 ம் தேதி தேனாம்பேட்டையில் உள்ள அன்பகத்தில் திமுக இளைஞரணி சார்பில் நடைபெற்ற கலைஞர் வாசகர் வட்ட கூட்டத்தில் பட்டியலின மக்கள் குறித்து ஆர்.எஸ் பாரதி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்திருந்தனர். இதனையடுத்து, திமுக அமைப்பு  செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேற்று அதிகாலை அவரது  வீட்டில் வைத்து போலீசார் கைது செய்தனர். 

பின்னர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்ட ஆர்.எஸ் பாரதியிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதன் பின்பு எழும்பூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி செல்வகுமார் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, ஆர்.எஸ்.பாரதி கைதான தகவல் கிடைத்து ஏராளமான திமுகவினர் அங்கு குவிந்து  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, எம்.எல்.ஏ.க்கள் ரவிச்சந்திரன், ராஜா ரங்கநாதன் உள்பட 96 பேர் மீது சட்டவிரோதமாக கூடுதல், தொற்றுநோய் பரப்புதல், தெரிந்தே பிறருக்கு தொற்று நோய் ஏற்படுத்தும் செயல் செய்தல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் எழும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.