சென்னை ஆவடி அருகே கோவில்களை புணரமைப்பதாக பொதுமக்களிடம் நிதி திரட்டி ரூ.44 லட்சம் மோசடி செய்த யூடியூப்பர் கார்த்தி கோபிநாத் ஆவடி காவல் ஆணையர் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். 

பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் மதுரகாளி அம்மன் கோவில் செயல் அலுவலராக இருக்கும் அரவிந்தன் என்பவர் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர் அளித்துள்ள புகாரில் ஆவடி அடுத்த முத்தாபுதுப்பேட்டை சேர்ந்த இளைய பாரதம்‌ என்ற பெயரில்‌ யூடியூப்‌ சமூக வலைத்தளம்‌ நடத்தி வரும் கார்த்தி கோபிநாத் என்பவர் மிலாப்‌ ஃபண்ட்‌ ரைசேர்‌ சைட்‌ என்ற தளம்‌ மூலமாக சிறுவாச்சூர்‌ மதுரகாளியம்மன்‌ கோவிலின்‌ உப கோவில்களில்‌ உள்ள பழுதடைந்த சிலைகளை புனரமைப்பதாக பொதுமக்களிடம்‌ இருந்து ரூ. 44 லட்சம்‌ நிதி திரட்டியுள்ளார்‌. இதற்கு அவர்‌ இந்து சமய அறநிலையத்துறையிடம்‌ முறையான அனுமதி பெறவில்லை.

மேலும்‌, கார்த்திக்‌ கோபிநாத்‌ அந்தப்‌ பணத்தை தனது சுய லாபத்திற்காக பயன்படுத்திக்‌ கொண்டுள்ளார்‌. எனவே, அவர்‌ மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்‌ என்று கூறியிருந்தார்‌. இதனையடுத்து குற்றப்பிரிவு காவல்‌ ஆய்வாளர்‌ ஜெயச்சந்திரன்‌ தலைமையில்‌ போலீஸார்‌ 406, 420, 66 ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்‌ பதிவு செய்து கார்த்தி கோபிநாத்தை தேடி வந்த நிலையில், இன்று அவரை கைது செய்தனர்.

மேலும் படிக்க: கோயில்களை சீரமைத்து தருவதாக ரூ.50 லட்சம் மோசடி புகார்..! பாஜக ஆதரவாளர் கைதிற்கு அண்ணாமலை கண்டனம்

இதுக்குறித்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,” ஆவடி காவல்‌ ஆணையரகம்‌, மத்திய குற்றப்பிரிவில்‌ பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் மதுர காளி அம்மன்‌ திருக்கோவில்‌ செயல்‌ அலுவலராக இருக்கும் அரவிந்தன்,என்பவர் இளைய பாரதம் எனும் யூடியூப்பை நடத்தி வரும் கார்த்தி கோபிநாத் என்பவர் குறிப்பிட்ட கோவிலின்‌ உப கோவில்களில்‌ உள்ள பழுதடைந்த
சிலைகளை புணர்‌ அமைப்பதற்காக வேண்டி இந்து அறநிலையத்துறையிடம்‌ முறையான அனுமதி பெறாமல்‌ பொதுமக்களை ஏமாற்றி நிதி திரட்டி அதை தனது சுயலாபத்திற்காக பயன்படுத்திக்‌ கொண்டுள்ளார்‌ என்று கொடுத்தப்‌ புகாரின்‌ பேரில்‌ ஆவடி மத்திய குற்றப்பிரிவு வழக்கு பதிவு செய்து, புலன்‌ விசாரணை மேற்கொண்டது. இந்நிலையில் இந்த வழக்கில் கார்த்திக் கோபிநாத் என்பவர் இன்று கைது செய்யப்பட்டு அம்பத்தூர்‌ விரைவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக இக்கோவில் சிலை கடந்த ஆண்டு உடைக்கப்பட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரை போலீசார் கைது செய்தனர். ஆனால் இச்சிலை மாற்று மதத்தினரால் குறிவைத்து உடைக்கப்பட்டது என்றும் பாஜக ஆதரவாளர், விஎச்எஸ் அமைப்பைச் சேர்ந்தவரும், யூடியூப்பருமான கார்த்திக் கோபிநாத் தொடர்ந்து கூறி வந்தார். இந்நிலையில் இன்று அவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே காவல்துறையின் இந்த கைது நடவடிக்கை கண்டித்தும், அரசுக்கு எதிராக குரல் கொடுக்கும் நபர்கள் குறி வைக்கப்பட்டு கைது செய்யப்படுகிறார் என்றும் ஒரு தரப்பினர் குற்றச்சாட்டி வருகின்றனர்.

மேலும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாஜக ஆதர்வாளரான கார்த்தி கோபிநாத் கைது செய்யப்பட்டுள்ளதை கண்டித்துள்ளார். மேலும் பாஜக நிர்வாகிகள் பலர் யூடியூபர் கார்த்தி கோபிநாத் கைது செய்யப்பட்டுள்ளதை கண்டித்துள்ளனர். தமிழக காவல்துறை மற்றும் தமிழக அரசை விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் கட்டுமான நிறுவனமான ஜி ஸ்கொயரைச் சேர்ந்த புருஷோத்தம் குமார் என்பவர் அளித்த புகாரில் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர், யூடியூபர் மாரிதாஸ், முன்னணி வார இதழ் விகடன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது பரப்பரப்பை ஏற்படுத்தியது.ஜூனியர் விகடன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதற்கு பத்திரிக்கையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், அரசியல் கட்சிகளும் ஜூனியர் விகடன், சவுக்கு சங்கர், மாரிதாஸ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க: VHS கார்த்தி கோபிநாத் மேலயே கை வச்சுட்டீங்களா..?? சும்மா விடமாட்டேன்.. ஆவடி போலீசை அலறவிடும் சு. சாமி.