கோவில்களை புனரமைக்க பணம் வசூலித்தார் எனக்கூறி விஎச்எஸ் அமைப்பைச் சேர்ந்த கார்த்திக் கோபிநாத் கைது செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது, அவரின் கைதை எதிர்த்து போலீசாருக்கு எதிராக வழக்குத் தொடுப்பேன் என சுப்ரமணியசாமி எச்சரித்துள்ளார்.  

கோவில்களை புனரமைக்க பணம் வசூலித்தார் எனக்கூறி விஎச்எஸ் அமைப்பைச் சேர்ந்த கார்த்தி கோபிநாத் கைது செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது, அவரின் கைதை எதிர்த்து போலீசாருக்கு எதிராக வழக்குத் தொடுப்பேன் என சுப்ரமணியசாமி எச்சரித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் இவ்வாறு எச்சரித்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் சிலை கடந்த ஆண்டு உடைக்கப்பட்டது, இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது, இந்த விவகாரத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரை போலீசார் கைது செய்தனர். ஆனால் இச்சிலை மாற்று மதத்தினரால் குறிவைத்து உடைக்கப்பட்டது என்றும் பாஜக ஆதரவாளர், விஎச்எஸ் அமைப்பைச் சேர்ந்தவரும், யூடியூப்பருமான கார்த்திக் கோபிநாத் தொடர்ந்து கூறி வந்தார், மேலும் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் புனரமைக்கப் போவதாகவும், கார்த்திக் கோபிநாத் சமூகவலைதளத்தில் வீடியோ வெளியிட்டார். இதற்கு நிதி வழங்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார். இந்நிலையில் அதற்காக கோபிநாத் சுமார் 50 லட்சம் ரூபாய் வரை வசூலித்ததாக இதற்கான எந்த கணக்கு வழக்கும் காட்டாத அவர் பணத்தை மோசடி செய்ததாகவும் புகார்கள் எழுந்தது.

இந்நிலையில் அவருக்கு எதிராக புகார் கொடுக்கப்பட்ட நிலையில் ஆவடி போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.மேலும் பலருக்கு இதில் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது, இந்நிலையில் கோபிநாத்தின் கூட்டாளிகளை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். கோவிலை புனரமைக்க வேண்டும் என்ற பெயரில் பொது மக்களிடம் வசூல் செய்து மோசடி செய்ததாகவும், மதுரகாளியம்மன் கோவில் சிலை உடைப்பு சம்பவத்தை வைத்து மத கலவரத்தை தூண்ட முயற்சி செய்தார் என்ற பிரிவின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் அவரது கைதை கண்டித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் எச். ராஜா ஆகியோர் ட்வீட் செய்துள்ளனர். கார்த்தி கோபிநாத் கைது வன்மையாக கண்டிக்கத்தக்கது, இந்துக்களும் இந்து கோவில்களும் பாதிக்கபட்டால் அதற்கு உதவிட யாரும் முன்வர கூடாது என பயமுறுத்தும் இந்து விரோத அரசியல் வன்மத்தின் வெளிப்பாடு இது என எச். ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் இதுகுறித்து அண்ணாமலை தங்களுக்கு எதிரான குரல்களை ஒடுக்க திமுக அரசு முயற்சிக்கிறது, கார்த்தி கோபிநாத்தின் தந்தையிடம் நான் பேசினேன் கார்த்திக் கோபிநாத்துக்கு ஆதரவாக நிற்போம் பாஜக வழக்கறிஞர் அணி கார்த்திக் கோபிநாத்திற்கு துணை நிற்கும் என அவர் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் இது குறித்து சுப்பிரமணியன் சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் கார்த்தி கோபிநாத்துக்கு ஆதரவாக கருத்து பதிவிட்டுள்ளார். அதில் சென்னைக்கு அருகில் உள்ள ஆவடி காவல் நிலையம் நமது விஎச்எஸ் இளைஞர் கார்த்திக் கோபிநாத்தை கோவிலை மராமத்து செய்ய பொதுமக்களிடம் பணம் வசூலித்தார் என்பதற்காக அவரை கைது செய்துள்ளனர். இது மிகவும் ஆச்சரியமாக உள்ளது, இது அரசியல் சாசனத்தில் 25-வது பிரிவை மீறுவதாகும். எனவே காவல்துறைக்கு எதிராக வழக்கு பதிவு செய்வேன் என அவர் பதிவிட்டுள்ளார்.

Scroll to load tweet…

அவரின் இந்த பதிவுக்காக அவரை பலரும் விமர்சித்து வருகின்றனர். அதாவது, கோவில் பராமரிப்பு பணிக்கு பணம் வசூலித்தார் என்பதற்காக கைது செய்யப்படவில்லை பல கோடிகளை வசூலித்து அதில் மோசடி செய்ததார் என்பதற்காகத் தான் இந்த கைது, இதோடு கோவிலை இடித்தது வேறு மதத்தினர் எனக்கூறி மத கலவரத்தை தூண்ட முற்பட்டார் என்பதும் அவர் மீது உள்ள குற்றச்சாட்டு, மோசடி செய்பவரை உத்தமர் என்று கூறுகிறீர்களா என நெட்டிசன்கள் சு.சாமியை கேள்வி எழுப்பி வருகின்றனர்.