rs 25 crore allotted for relief works in kanyakumari district
ஓக்ஹி புயலால் பெரும் பாதிப்புக்கு உள்ளான குமரி மாவட்டத்தில் உடனடி நிவாரணப் பணிகளை மேற்கொள்ள ரூ.25 கோடி ஒதுக்கியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
இதுகுறித்து அரசு சார்பில் வெளியிட்ட அறிக்கையில், 30.11.2017 அன்று கன்னியாகுமரிக்கு அருகே கடந்து சென்ற ‘ஒகி’ புயல் காரணமாக ஏற்பட்ட பலத்த காற்று மற்றும் மிக கன மழையினால், கன்னியாகுமரி மாவட்டம் பெரிதும் பாதிப்புக்கு உள்ளானது. தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து மீட்பு, நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள சாலைகள், நெடுஞ்சாலைகள் என பல்வேறு இடங்களில் நூற்றுக் கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்து, அதனால் மின்சார உள்கட்டமைப்புகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றன. கன மழையின் காரணமாகசாலைகளும் சேதமடைந்துள்ளன.
தமிழ்நாடு அரசு, மக்களுக்கான மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருவதுடன், அதற்கான நிதி உதவியும் மிக அவசியம் என்பதை அறிந்துள்ளது. எனவே, நடைபெற்று வரும் மீட்பு, நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை மேலும் துரிதப்படுத்தும் வகையில், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 25 கோடி ரூபாய் உடனடியாக விடுவித்திட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
சேதமடைந்துள்ள மின் உள்கட்டமைப்புகளை விரைவில் சீர் செய்து, தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டும், மீட்பு, நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை துரிதமாக மேற்கொள்ளவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், வேளாண்மைத் துறை, தோட்டக் கலைத் துறை, பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, நகராட்சிகள் துறை, பேரூராட்சிகள் துறை, ஊரக வளர்ச்சித் துறை மற்றும் வருவாய்த் துறை ஆகிய துறைகளுக்கு 25 கோடி ரூபாய் உடனடியாக வழங்கப்படும்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீர் செய்யும் பணியில், பல்வேறு துறையினரை ஒருங்கிணைத்து, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொண்டு, மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு விரைவில் திரும்பிட வழி வகை செய்ய முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
