தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதுக்கோட்டையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பின்னர் புதுக்கோட்டையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சை குறித்து முதல்வர் பழனிசாமி ஆய்வு செய்தார். இதையடுத்து பேசிய அவர், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டினால் தமிழகத்திற்கு நிறைய முதலீடுகள் கிடைத்துள்ளன. இதன்மூலம் வேலைவாய்ப்பு பெருகியுள்ளது.

இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பொய்யான தகவலை பரப்பி வருகிறார். விவசாயிகள் நலனில் அதிக அக்கறையுடன் செயல்படுவது அதிமுக அரசு மட்டுமே. பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை சார்பாக ஏராளமான பணிகள் நடந்துள்ளன. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளது.

தடுப்பூசி பரிசோதனைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது பயன்பாட்டிற்கு வந்தவுடன் அரசு செலவில் தமிழக மக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும்’’ என்று கூறினார். முன்னதாக பிகார் மாநில தேர்தலை ஒட்டி பாஜக இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருந்தது. அதில் தாங்கள் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் பிகார் மாநில மக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிச்சாமி அனைவருக்கும் கொரோனா தடுப்புச் இலவசம் என்று அதிரடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டு மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளார். மத்திய அரசு, மாநிலங்களுக்கு குறைந்த விலையில் கொரோனா தடுப்பூசிகளை வழங்கும். மாநில அரசு தான் அதை இலவசமாக போடவேண்டுமா, பணம் வாங்கி வழங்க வேண்டுமா என்பதை முடிவு செய்யும் என்று பாஜக ஊடகப்பிரிவு நிர்வாகி மால்வியா தெரிவித்து இருந்தார் . ஆனால் தமிழக அரசு இப்போதே இப்படி ஒரு இன்ப அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டும் என்பதால், ஒரு கொரோனா தடுப்பூசிக்கு ஆயிரம் ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை செலவாகும். இது சமானியர்களுக்கு பெரும் சுமை. ஒரு ஊசி 5000 என்றால், ஒரு குடும்பத்தில் நான்கு பேருக்கு ஊசி போட்டால் ரூ.20,000 செலவாகும். இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.