முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் ராமர்- லட்சுமணன் போல் ஒற்றுமையாக உள்ளனர் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சமாளித்து வருகிறார். 

அதிமுக கட்சியினுள் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்த சர்ச்சை கிளம்பியது. இந்நிலையில் கட்சிக்கு நான், ஆட்சிக்கு நீ என ஓ.பி.எஸ் பிடிவாதம் காட்டி வருகிறார். இது அக்கட்சியில் பெரும் புயலைக் கிளப்பி உள்ளது. இந்நிலையில்,  செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ‘’அதிமுக ராணுவ கட்டுப்பாடுடன் இயங்கி வருகிறது. முதல்வரும், துணை முதல்வரும் அன்பு என்னும் கட்டுபாட்டுக்குள் தொண்டர்களை வைத்திருக்கிறார்கள்.

 

ஊடகங்களில் வெளிவரும் செய்திகள் பரபரப்பை அடிப்படையாக கொண்டு வெளிவருகிறதே தவிர மற்ற படி முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் ராமன் -லட்சுமணனுக்கு இடையே இருக்கும் புரிதல் இருக்கிறது. இது சத்தியம். இளைஞர்கள் அதிமுகவில் இணைய தாமாக முன்வந்து முன்வந்து கொண்டிருக்கின்றனர்’’என அவர் தெரிவித்தார்.

ஜெயலலிதா மறைவடைந்த உடன் ஓ.பி.எஸ் முதல்வராக இருந்த போது, முதன் முதலாக ஓ.பி.எஸ் பதவி விலக வேண்டும். ஆட்சியும், கட்சியும் ஒரே ஆளிடம் இருக்க வேண்டும். சசிகலா முதல்வராக ஓ.பி.எஸ் வழிவிட வேண்டும் என்று வெளிப்படையாக மேடையில் பேசி விவகாரத்தை அப்போது பெரிதாக்கியவர்தான் இந்த ஆர்.பி.உதயகுமார். அதிகாரத்தில் யார் இருக்கிறார்களோ, அல்லது அடுத்து யார் வரப்போகிறார்களோ அவர்களது ஒட்டுமொத்த ஆதரவாளராக மாறிவிடுவது அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் வாடிக்கை. பொதுவாக நாரதர் ஆரம்பித்து வைக்கும் கலகம் நல்லதில் முடியும் என்பார்கள்.