இரு மகன்களையும் ஐஏஎஸ் ஆக்கிய சாமானியர்.. தலைமைச் செயலாளர் இறையன்புவின் தந்தைக்கு ராயல் சல்யூட்.
நேபாள நாட்டில் ஏற்பட்ட பூகம்பத்தின் போதும் அந்நாட்டு அரசுக்கு சிறப்பு ஆலோசகராக திருப்புகழ் அழைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது இளைய மகனான இறையன்பு ஐஏஎஸ்தான் இப்போது தமிழகத்தின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக சேலத்தைச் சேர்ந்த வெ. இறையன்பு ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல நடந்து முடிந்த எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியில் தலைமைச் செயலாளராக பணியாற்றிய கே. சண்முகம் சேலம் மாவட்டம் வாழப்பாடியை சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது புதிதாக தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள வெ.இறையன்பு ஐஏஎஸ் தமிழக மக்களுக்கு மிகவும் பரிச்சயமானவர். ஐஏஎஸ் என்பதையும் தாண்டி, எழுத்தாளர், கல்வியாளர், தன்னம்பிக்கை பேச்சாளர் என இவருக்கு பல முகங்கள் உண்டு. சிறந்த நிர்வாகத் திறனும், தமிழ் மீது தீராத காதலும் கொண்ட இறையன்பு ஐஏஎஸ் சேலம் சுப்ரமணிய நகர் பகுதியைச் சேர்ந்த வெங்கடாசலம் பேபி சரோஜா தம்பதியரின் புதல்வராவார்.
1963 இல் பிறந்த இவர் சேலத்திலேயே பள்ளிப்படிப்பை தொடங்கினார், இவர் மட்டுமல்லாது இவரின் சகோதரர் திருபுகழும் சிறந்த ஐஏஎஸ் அதிகாரி ஆவார். மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை முகமை ஆலோசகராக டெல்லியின் பணி செய்து வருகிறார். மோடிக்கு மிகுந்த நம்பிக்கைக்குரிய அதிகாரியாக விளங்கியவர் ஆவார். இப்படி சிறப்புமிக்க இரண்டு புதல்வர்களை ஈன்றெடுத்த அவரது தந்தை வெங்கடாச்சலம் சேலம் மக்களால் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள பலராலும் பாராட்டப்பட்டு வருகிறார். அவர் ஈன்றெடுத்த இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் என நால்வரையும் தனது கடின உழைப்பால் சமூகத்தில் சிறப்புமிக்க ஊயரத்திற்கு உயர்த்தியுள்ளார் என்பதுதான் அதற்கு காரணம். பேருந்தில் செல்ல பணம் இல்லாமல் சைக்கிளில் சென்று வேலை பார்த்த நிலையிலும், தனது புதல்வர்களை ஐஏஎஸ் அதிகாரிகளாகவும், எழுத்தாளர்களாகவும், பேராசிரியர்களாகவும் மாற்றியிருப்பது தந்தை வெங்கடாசலத்தின் உழைப்போம் அவரது விடா முயற்சியுதான் என அப்பகுதி மக்கள் பாராட்டுகின்றனர். தனது பிள்ளைகள் உச்ச நிலைக்கு உயர்ந்திருந்தாலும், எளிமையின் உருவாக வெங்கடாஜலம் இன்னும் சேலம் சூரமங்கலத்தில் உள்ள தனது பழைய வீட்டிலேயே கிராமத்து மனம் மாறாமல், எளிமையுடன் வசித்து வருகிறார் என்பதுதான் சிறப்பு.
தமிழ் மீது தீராப் பற்றுக் கொண்ட வெங்கடாசலம் தனது மகன்களுக்கு திருப்புகழ் இறையன்பு என்றும் மகள்களுக்கு பைங்கிளி இன்சுவை என்றும் தமிழ் மனம் மாறாது பெயர் சூட்டியுள்ளார். வறுமை தன்னைச் சூழ்ந்தபோதும் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த வெங்கடாச்சலம், தனது இரு மகன்களையும் ஐஏஎஸ் ஆக்கியதுடன் மகள் இன்சுவையை ஆங்கிலப் பேராசிரியராகவும், எழுத்தாளராகவும், மற்றொரு மகள் வெ. பைங்கிளியை கல்லூரிப் பேராசிரியராகவும் உருவாக்கியுள்ளார். அதே போல அவரின் மூத்த மகனான திருப்புகழ் இந்தியாவிலேயே பேரிடர் மேலாண்மையில் பட்டம் பெற்ற ஒரு ஐஏஎஸ் அதிகாரி ஆவார். குஜராத்தில் பூகம்பம் ஏற்பட்டபோது அங்கு அவர் சிறப்பாக பணியாற்றினார், தனது திறனால், மீட்பு பணிகளை கூர்மைப்படுத்தி இடிபாடுகளில் சிக்கிய ஏராளமான மக்களை மீட்டார். அதன் மூலம் குஜராத் மக்களின் நன்மதிப்பையும் பாராட்டையும் பெற்றுள்ளார் திருப்புகழ்.நேபாள நாட்டில் ஏற்பட்ட பூகம்பத்தின் போதும் அந்நாட்டு அரசுக்கு சிறப்பு ஆலோசகராக திருப்புகழ் அழைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது இளைய மகனான இறையன்பு ஐஏஎஸ்தான் இப்போது தமிழகத்தின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். வெ. இறையன்பு ஐஏஎஸ் நேர்மையாளர், எளிமையானவர் தமிழகத்தை சுனாமி தாக்கியபோது மீட்புப் பணிகளை மேற்கொண்டு திறமையானவர் என பெயர் பெற்றார். இதையும் தாண்டி தமிழ்மீதும் இலக்கியத்தின்மீதும் அதிக ஆர்வம் கொண்ட இறையன்பு நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். ஆங்கிலத்தில் மூன்று நூல்களை எழுதியுள்ளார். கிராமப்புற பின்னணியிலிருந்து ஏழ்மைக் குடும்பத்தில் இருந்து வரும் இளைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ஐஏஎஸ் தேர்வை அணுகுவது எப்படி என ஐஏஎஸ் தேர்வு அணுகுமுறை என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளார். ஏழாவது அறிவு, சாகாவரம், காகிதம், அரிதாரம், அணுகுமுறை ஜனநாயகம், மருந்து, வேடிக்கை எனப் பல்வேறு புத்தகங்களை அவர் வெளியிட்டுள்ளார். குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிலா பள்ளிகளை துவக்கி (இரவு நேரப்பள்ளிகளை) அனைவரும் கல்வி கற்க வழி செய்தார் என்பது இவரின் சிறப்புகளில் தனிச் சிறப்பு. இப்படி பெருமைமிகு புதல்வர்களை நாட்டுக்கு உருவாக்கி தந்துள்ள தந்தை வெங்கடாச்சலம் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவரே. தமிழக தலைமைச் செயலாளர் இறையன்புவின் தந்தைக்கு நம் ராயல் சல்யூட்.