திமுக ஆட்சியில் இல்லாததால் கடந்த 10 ஆண்டுகளாக மதுரையில் ரவுடிகள் அராஜகம் இல்லை என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மேலும், மதுரையில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு டெபாசிட் கூட கிடைக்காது எனவும் அவர் கூறியுள்ளார். மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில், செல்லூரில் ஆலோசனைக்கூட்டம்  நடைபெற்றது. அதில் மாவட்ட செயலாளரும், அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: 

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஏராளமான திட்டங்களை மதுரைக்கு வழங்கியுள்ளார். முதலமைச்சர் அவர்களுக்கு உதவியாக துணை முதலமைச்சர் இருந்து வருகிறார். மதுரை மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில், இப்போது கூட சுமார் 1200 கோடி ரூபாய் மதிப்பில்  குடிநீர் திட்டப் பணிகளுக்கு அடிக்கல்  நாட்டப்பட்டுள்ளது. விரைவில் இதை திறக்க முதலமைச்சராக மதுரைக்கு வர உள்ளார். இத்திட்டத்தின் மூலம் மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் 24 மணி நேரமும் குடிநீர் தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். ஆனால் திமுக ஆட்சியில் இருந்தவரை மதுரைக்கு எந்த திட்டங்களும் கொண்டுவரப்படவில்லை. மதுரை மாநகராட்சியின் வளர்ச்சிக்காக அம்மா 250 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உதவினார். ஆனால் திமுக தன் ஆட்சிக் காலத்தில் மதுரையை சீரழிக்க 250  ரவுடிகளை தான் கொடுத்தது. 

தற்போது சாதியை காட்டி மதத்தை கூறி திமுக வெற்றி பெற வேஷம் போட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக மதுரையில் ரவுடிகள் அராஜகம் என்பது இல்லவே இல்லை. திமுக ஆட்சிக்கு வந்தால் ரவுடிகள் அராஜகம் தலைதூக்கும். முதலமைச்சரின் திட்டங்களை கட்சித் தொண்டர்கள் மக்கள் மத்தியில் கொண்டு சென்று அதிமுகவை மாபெரும் வெற்றிபெற செய்ய வேண்டும். முதலில் கழகத்தை எதிர்த்து போட்டியிடும் அனைத்து எதிர்க்கட்சிகளும் டெபாசிட் இழக்க செய்ய வேண்டும், தொண்டர்கள் இரவு பகல் பாராமல் கட்சிக்காக உழைக்க வேண்டும், அதற்கான அங்கீகாரத்தை முதல்வரும், துணை முதல்வரும் நிச்சயம் வழங்குவார்கள். இவ்வாறு அமைச்சர் பேசினார்.