Money distribution

வருமான வரித்துறை நடத்திய அதிரடி சோதனையில் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சிக்கிய ஆவணத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் ஆர்,கே.நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா செய்வது தொடர்பாக குறிப்பிடப்பட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அமைச்சர்கள் மீது நடவடிக்கை பாயலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த ஆவணத்தில் ஒவ்வொரு அமைச்சருக்கும் எந்த பகுதி ,எத்தனை பேருக்கு பணம் கொடுக்க வேண்டும், என்ற விவரங்கள் குறிப்பிடப்பட்டள்ளன.

அதன்படிஅமைச்சர் செங்கோட்டையன் பெயரில் 37 பாகங்கள் 32, 830 வாக்காளர்களுக்கு , ரூ. 13 கோடியே 13 லட்சத்து 20 ஆயிரம் ..

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பெயரில் 38 பாகங்கள், 33, 193 ஓட்டுகள் ரூ. 13 கோடியே 27 லட்சத்து 72 ஆயிரம் என்றும் கூறப்பட்டுள்ளது.

மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கம், 27,837 ஓட்டுகள், ரூ. 11 கோடியே 13 லட்சத்து, 48 ஆயிரம்.

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் 36 பாகங்கள், 32,092 வாக்காளர்களுக்கு ரூ.12 கோடியே 83 லட்சத்து 68 ஆயிரம்.

மின்சார துறை அமைச்சர் தங்கமணிக்கு 37 பாகங்கள், 31, 683 வாக்காளர்களுக்கு, ரூ.12 கோடியே, 67 லட்சத்து, 32 ஆயிரம்..

உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணிக்கு 42 பாகங்கள், 27,291 வாக்காளர்களுக்கு ரூ.14 கோடியே, 91 லட்சத்து, 64 ஆயிரம்.

.

நிதியமைச்சர் ஜெயக்குமாருக்கு 33 பாகங்கள் 29219 வாக்காளர்களுக்கு ரூ.11 கோடியே 68 லட்சத்து 76 ஆயிரம்...என அந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது. மொத்தமாக 89 கோடியே 65 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் வரை பட்டுவாடா செய்ய திட்டமிடப்பட்டிருந்தது அம்பலமாகியுள்ளது.

இந்த தொகை ஒரு வாக்காளருக்கு 4000 ரூபாய் வீதம் வாக்களர்களுக்கு90 கோடி ரூபாய் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலிருந்து வழங்கப்பட்டுள்ளதும் இந்த ஆவணங்கள் மூலம் தெரிவந்துள்ளது.

அதே நேரத்தில் இதுவரை 50 கோடி கோடிக்குமேல் பட்டுவாடா செய்யப்படுள்ளதம் அந்த ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

அந்த பணத்தை அமைச்சர்களே முன்னின்று பிரித்து வழங்கியதற்கான ஆதாரம் சோதனையின் போது சிக்கியிருக்கிறது..

எப்படியும் வெற்றிபெற வேண்டும் அதைவிட பன்னீர் அணியைவிட கூடுதலாக வாக்குகளை பெற வேண்டுமென்பதற்காக 90 கோடியை சாதாரணமாக செலவு செய்துள்ளதும் அம்பலமாகியுள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அமைச்சர்களே இந்த பணிகளை முன்னின்று நடத்தியிருப்பதால் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

90 கோடி ரூபாயை செலவு செய்து ஜெயிக்க நினைக்கும் டி.டி.வி.தினகரனை தகுதிநீக்கம் செய்யவேண்டும் என்றும் அவரிடம் உரிய விசாரணை மேற்கொள்ளவேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. அதே நேரத்தில் தேர்தல் ஆணையம் அப்பிரச்சனையில் கடும் நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.