rk nagar elections dmk trailing in third place while

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு துவங்கியது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று காலை முதலே கட்சியினர் பலரும் குவிந்தனர். 

வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதலே, சுயேச்சையாகப் போட்டியிடும் டிடிவி தினகரன் முன்னிலை வகித்து வருகிறார். முதலிடத்தில் தினகரனும், இரண்டாமிடத்தில் அதிமுகவும், மூன்றாம் இடத்தில் பல கட்சிகள் ஆதரவுடன் போட்டியிட்ட திமுக.,வும் வந்து கொண்டிருக்கின்றன.

இதில், டிடிவி தினகரன் குறித்து பல்வேறு பிரசாரங்கள் செய்யப் பட்டன. வாக்குக்கு பணம் கொடுத்தார், பணம் விளையாடிய தேர்தல் இது, வீட்டுக்கு வீடு குக்கர் கொடுத்தார் என்றெல்லாம் திமுக.,வினரும் பாஜக., அதிமுக., உள்ளிட்ட பலரும் குற்றம் சாட்டினர். தேர்தல் அலுவலர்கள் பல இடங்களில் பண விநியோகத்தைத் தடுக்க முயன்றும் முடியாமல் போனது. 

முன்னதாக, ஆர்கே நகர் தொகுதிக்கு கடந்த ஓராண்டுக்குப் பிறகு பெரும் சர்ச்சைகளுக்கு இடையே இடைத்தேர்தல் அறிவிக்கப் பட்டது. தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டதுமே, பல்வேறு கட்சியினரும் சுறுசுறுப்பு அடைந்தனர். திமுக., ஏற்கெனவே அறிவிக்கப் பட்டிருந்த வேட்பாளரான மருது கணேஷை களம் இறக்கியது. அதிமுக.,வுக்குள் பிரச்னை நீடித்து ஒருவழியாக மதுசூதனன் அறிவிக்கப்பட்டார். 

தேர்தல் தேதி வெளியானபோதே, தேமுதிக.,வின் விஜயகாந்த் இந்தத் தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை என்று கழன்று கொண்டார். விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரிகள், கம்யூ. காங்கிரஸ் என ஏற்கெனவே உள்ள பழைய கூட்டணிக் கட்சியினருடன், புதிதாக மதிமுக.,வும் இணைந்து கொண்டு திமுக.,வுக்கு தங்கள் ஆதரவை வாரி வழங்கின. பாஜக., வோ, அதிமுக.,வின் பின்னணியில் உள்ள கட்சி என்ற விமர்சனத்தைத் தவிர்ப்பதற்காகவே இந்தத் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தது. ஆனால் அதற்கு வேட்பாளர் கிடைக்காமல் தள்ளாடி, ஒருவழியாக கரு.நாகராஜன் என்ற சமத்துவ மக்கள் கட்சியில் இருந்து பாஜக.வுக்கு வந்தவரை போட்டியிட வைத்தது. 

எல்லாம் இருந்தும், சுயேச்சையாகக் களம் இறங்கிய தினகரனே இந்தத் தேர்தல் பிரசாரத்தில் பெருமளவிலான மக்கள், ஊடகத்தினர் உள்ளிட்டோரின் கவனத்தைக் கவர்ந்தார். நானே உண்மையான அதிமுக., என்று சொல்லிக் கொண்டிருக்கும் தினகரன், இரட்டை இலைச் சின்னத்தைக் காட்டிலும், சின்னம்மாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் அதிமுகவே உண்மையான அதிமுக., என்று காட்டுவேன் என்று சூளுரைத்து களத்தில் இறங்கினார். 

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக அரசியலில் தாங்கள்தான் தவிர்க்க முடியாத சக்தி எனக் கூறிக் கொண்டு, மத்திய பாஜக., அரசையும் மாநில அதிமுக., அரசையும் கடுமையாக எதிர்த்து வரும் திமுக., தன் கூட்டணிக் கட்சியினரான காங்கிரஸ், மதிமுக, விசிக, கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு உள்ளிட்ட பல கட்சிகளைக் கைகோர்த்துக் கொண்டு களத்தில் இறங்கியது. ஆனால் இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளிவந்த நிலையில், திமுக மிகக் குறைவான வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்திலேயே நீடித்தது. இத்தனை கூட்டணிக் கட்சித் தலைவர்களும் திமுக., வேட்பாளருக்கு ஆதரவாக சூறாவளி பிரசாரம் செய்தும், திமுக., தள்ளாடிக் கொண்டிருக்கிறது.