rk nagar election should be postponed second time speculations around

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் இரண்டாவது முறையாக நிறுத்தப் படும் சூழல் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறதாம். 

சென்னை ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் இப்போதும் பணம் புகுந்து விளையாடுகிறது என்று மீண்டும் புகார்கள் கூறப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஏற்கெனவே கூறப்பட்ட புகார்களைப் போல் தேர்தல் ஆணையம் எதிர்கொண்டு, பண விநியோகத்தை தடுக்க முடியவில்லை என்று கைவிரித்து தேர்தலை ஒத்தி வைத்தது போல், இப்போதும் அதேபோல் சொல்லப்பட, அதிக வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் இப்போது விசித்திரமான நிலையை எட்டியிருக்கிறது. முன்னர் ஆளும் கட்சியின் ஆதரவுடன் களத்தில் இறங்கி சக்கை போடு போட்டார் டிடிவி தினகரன். தொப்பிக்குள் தூள் பறந்தது கட்டுக் கட்டாய் பணம். இத்தனைக்கும் அப்போது, டிமானிடைசேஷன் எனும் பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப் பட்டு, மக்களிடம் பணப்புழக்கத்துக்கே திண்டாட்டம் இருந்த நேரம். ஆனால், தேர்தல் களத்தில் மட்டும் கட்டுக் கட்டாய் பணம் கைமாறியது. இந்நிலையில் தங்களால் பண விநியோகத்தைக் கட்டுப் படுத்த முடியவில்லை என்று தேர்தல் ஆணையம் கைவிரித்தது. 

இந்த முறை சற்று வித்தியாசமான சுழல். டிடிகே தினகரன் சுயேச்சையாக, அதே பண பலத்துடன் போட்டியிடுகிறார். ஆனால், ஆளும் தரப்போ ஆளும் கட்சி எனும் அதிகார வளையத்துடன் களத்தில் அணுகுகிறது. திமுக.,வோ எல்லாம் நிறைந்த பலத்துடன் களத்தில் நிற்கிறது. இத்தகைய சூழலில் இந்த அம்சங்கள் எதிலுமே அடங்காமல், பாஜக., வெற்றுக் கை கூப்பலுடன் களத்தில் ஒப்புக்குச் சுற்றி வருகிறது. இந்தக் காரணத்தால்தான், நேற்று தமிழக தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானியிடம் சென்று புகார் மனு கொடுத்தார் பாஜக., தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன். 

தினகரன், தன் வெற்றிக்காகக் கடுமையாக உழைக்கிறார். அவரது ஆதரவாளர்கள், மூன்று மாதம் முன்பே ஆர்கே.நகர் தொகுதில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கி, வீடு வீடாகச் சென்று பணம் தருகின்றனராம். ஒருவருக்கு ரூ. 20 ஆயிரம் என்று கணக்கிட்டதாகக் கூறப்படுகிறது. சிலரோ ரூ. 40 ஆயிரம் என்று கூறுகிறார்கள்.

தி.மு.க., வேட்பாளர் மருது கணேஷ், பம்பரமாக சுழல்கிறார். ஆளும் தரப்பிடமோ, வாக்காளர்களை கனமாகக் கவனித்தால்தான் வெற்றி பெற முடியும் என்று வேட்பாளர் மதுசூதனனிடம் கூறி வருகின்றனர் கட்சியினர். இதையடுத்து தொகுதியில் ஆளும்கட்சியின் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் ஆர்.கே.நகர் தொகுதியில் முகாமிட்டு தீவிரமாகச் சுற்றி வருகின்றனர். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் இண்டு இடுக்குகளில் எல்லாம் சென்று வருகின்றனர். 

பண விநியோகம் தங்கு தடையின்றி நடப்பதை பாஜக., படம் பிடித்து ஆவணமாக்கி உள்ளது. இப்படி படமாக்கப்படும் விஷயங்களையெல்லாம் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல பாஜக., தீவிரம் காட்டி வருகிறது. 

ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட விஷால் மனு தாக்கல் செய்தபோது, சூழ்நிலையை மோசமாகக் கையாண்டு, நிலைமையை மோசமாக்கிய தேர்தல் அலுவலர் வேலுசாமி மாற்றப்பட்டு, தேர்தல் அலுவலர் பிரவீண் நாயர் புதிதாக நியமிக்கப் பட்டார். ஏற்கெனவே பணப்பட்டுவாடாவை தடுக்க முடியவில்லை என்று கைவிரித்த தேர்தல் ஆணையம், இப்போதும் அதையே செய்யும் என்று கூறப்படுகிறது. எனவே, ஆர்.கே.நகர் தேர்தலில் நடக்கும் தில்லுமுல்லுகளால், மீண்டும் தேர்தலை நிறுத்திவிடும் யோசனைக்கு தேர்தல் ஆணையம் வந்திருப்பதாக அதிகார மட்டத்தில் பரவலாகப் பேசப்படுகிறது.