தேர்தல் என வந்து விட்டாலே, பல சுவாரஸ்யமான விஷயங்கள் எல்லாம் அரங்கேறும். அதுவும் இடைத்தேர்தல் என்றால் கேட்கவே வேண்டாம்.

அப்படிப்பட்ட பல கூத்துக்களை ஆர்.கே.நகர் மக்கள் மட்டுமன்றி, அருகாமை தொகுதி மக்களும் கண்டு கழித்து வருகின்றனர்.

தொகுதியில் இருக்கும்  கொடுங்கையூர் குப்பைமேட்டின் மற்றொரு பகுதி பெரம்பூர் தொகுதியில் வருகிறது. 

அதனால், தொகுதியின் எல்லை தெரியாத சில வேட்பாளர்கள் பெரம்பூர் தொகுதியில் போய் பிரச்சாரம் செய்வதுடன் அங்குள்ள மக்களிடமும் வாக்கு சேகரித்து வருகின்றனர். 

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தான் கேள்விப்பட்டிருக்கிறோம், இது என்ன எல்லை தாண்டிய வாக்கு சேகரிப்பாக இருக்கிறதே என்று,  பெரம்பூர் தொகுதி மக்கள் விழுந்து விழுந்து சிரிக்கின்றனர்.

தொகுதிக்கு உட்பட்ட நேதாஜி நகரில், தென் மாவட்டத்தை சேர்ந்த  ஒரு  குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த மக்கள் அடர்த்தியாக வசிக்கின்றனர்.

அவர்களிடம், தென் மாவட்டத்தில் இறக்குமதி செய்யப்பட்டவர்கள்   உறவுமுறை சொல்லி வாக்குச் சேகரிக்க தொடங்கி விட்டனர்.. 

அதேபோல், மீனாம்பாள் நகரிலும் உறவுகள்தான் வசிக்கிறார்கள் என்று நினைத்து, உறவுமுறை சொல்லி வாக்கு சேகரிக்க, பதிலுக்கு அவர்கள் தெலுங்கில் மாட்லாட, அப்பா சாமி, ஆளை விட்டால் போதும் என்று தலை தெறிக்க ஓடி இருக்கிறது தென்மாவட்ட இறக்குமதிகள்.  

இது ஒருபுறம் இருக்க, தொகுதியில் சுற்றும் பல கார்களில் கட்சிக் கொடி இல்லாததால், எந்த அணியின் கார்' என்று தெரியாமல் ஏறி, பாதி வழியிலேயே கழுத்தை பிடித்து தள்ளும் நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன.