rk nagar byelection may be cancelled due to the money distribution

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், பணப்பட்டுவாடா நடைபெறுவதாக எழுந்த புகார் இந்திய முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பண விநியோகம் தொடர்பான வீடியோ ஆதாரங்களை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், தேர்தல் ஆணையத்திற்கு புகாராக அளித்துள்ளன. மேலும் சமூக வலை தலங்களிலும் இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாக பரவி வருகின்றன.

இந்நிலையில் இன்று காலை 6 மணி முதல் அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார், சிட்லபாக்கம் ராஜேந்திரன், சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், இயக்குனர் குழந்தை சாமி, எம்ஜிஆர் பல்கலைகழக துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோர் வீடுகளில் வருமான வரி துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான புதுக்கோட்டையில் உள்ள பள்ளி கல்வி நிறுவனங்கள், கல் குவாரி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதி என 30 க்கும் மேற்பட்ட இடங்களில், வருமான வரி துறையினரின் சோதனை நடைபெற்று வருகிறது.

இதில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பண விநியோகம் தொடர்பான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் முழுமையான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

கடந்த சட்டமன்ற தேர்தலின்போது, அமைச்சர்களுக்கு நெருக்கமான கரூர் அன்புநாதன் என்பவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், ஏராளமான பணம் கைப்பற்றப் பட்டதாக கூறப்பட்டது.

இதையடுத்து, தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதியின் தேர்தல் நிறுத்தப்பட்டது. அதே போல், தற்போது நடந்துவரும் சோதனை அடிப்படையில், ஆர்.கே.நகர் தேர்தலும் நிறுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை, ஆர்.கே.நகரில் தேர்தலை நிறுத்த வேண்டும் என்று ஏற்கனவே கூறி வரும் நிலையில், இன்று நடந்து வரும் வருமானவரி துறை சோதனை, அதை உறுதிப்படுத்துவதாகவே கூறப்படுகிறது.