rk nagar bye election polling will be live telecast said election commission

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் வாக்குப்பதிவு இணையத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கடந்த ஓராண்டாக காலியாக இருந்த ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. திமுக வேட்பாளர் மருது கணேஷ், சுயேட்சையாக போட்டியிடும் தினகரன், அதிமுக வேட்பாளர் மதுசூதனன் ஆகிய மூன்று தரப்புக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் ஆர்.கே.நகருக்கு நடக்க இருந்த இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா புகார் காரணமாக ரத்து செய்யப்பட்டது. அதனால், இந்தமுறை பணப்பட்டுவாடாவைத் தடுத்து நேர்மையான முறையில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

ஆனாலும் அதையும் மீறி ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இதுவரை 10க்கும் மேற்பட்டோர் ஆர்.கே.நகரில் கைது செய்யப்பட்டுள்ளனர். பணப்பட்டுவாடா புகார்கள் தொடர்பாக தேர்தல் சிறப்பு அதிகாரி விக்ரம் பத்ரா, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார்.

ஆர்.கே.நகர் முழுவதும் கம்பெனி துணை ராணுவப்படையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தேர்தல் ஆணையம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்தபோதிலும் ஆர்.கே.நகரில் போதுமான அளவுக்கு துணை ராணுவப்படையினரை பணியமர்த்த வேண்டும். ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட அனைத்து தெருக்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். அனைத்து வாக்கு சாவடிகளிலும் வாக்குப்பதிவை இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் என கோரி திமுக வேட்பாளர் மருதுகணேஷ், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கின் மீதான விசாரணையின்போது, ஆர்.கே.நகரின் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைபெறும் வாக்குப்பதிவு நேரடியாக இணையதளத்தில் ஒளிபரப்பு செய்யப்படும். ஆர்.கே.நகரில் 15 கம்பெனி துணை ராணுவப்படையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தேர்தலை நியாயமாக நடத்துவதில் தேர்தல் ஆணையம் உறுதியாக உள்ளது. பணப்பட்டுவாடா தொடர்பான புகார்களை எழுப்பி தேர்தலை ரத்து செய்ய திமுக முயற்சிக்கிறது என தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது.