தேனி நாடாளுமன்றத் தொகுதிக்கு கோவை மற்றும் திருவள்ளூரில் இருந்து எடுத்து வரப்பட்ட 70 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை உடனடியாக நீக்க வேண்டும் என்று தமிழக தேர்தல் அதிகாரியிடம் காங்கிரஸ் கட்சி மனு அளித்துள்ளது.
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் ஊடகத்துறை தலைவர் கோபண்ணா, காங்கிரஸ் கட்சியின் மூத்த வழக்கறிஞர்கள் சூரிய பிரகாஷ், நவாஸ் ஆகியோர் தமிழக தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு ஒன்றைக் கொடுத்தார்கள். அந்த மனுவில், ‘தேனி நாடாளுமன்றத் தொகுதிக்கு கோவை மற்றும் திருவள்ளூரில் இருந்து எடுத்து வரப்பட்ட 70 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை உடனடியாக நீக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த மனுவில், ‘தேனி நாடாளுமன்ற தொகுதியில் மே 19 அன்று நடைபெற உள்ள மறுவாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட உள்ள, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அதிமுக வேட்பாளருக்கு சாதகமாக திருத்தப்பட்டிருப்பதாக நம்புகிறோம். தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தன் அதிகார பலம், பண பலம் ஆகியவற்றைப் பயன்படுத்தி வாக்குப்பதிவு இயந்திரங்களில் திருத்தம் செய்து தன் மகனை வெற்றி பெற வைக்க முற்படுகிறார்.
ஏப்ரல் 18 அன்று வாக்குப்பதிவு மையங்களில் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்களை மாற்ற வசதியாக கோவையிலிருந்து சட்டவிரோதமாக தேனிக்கு 50 வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டன. இந்த விஷயத்தை தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்தோம். அந்த 'வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருப்பி அனுப்பப்படும்' என உறுதி கூறியிருந்தீர்கள்.

 
தற்போது தேனி தொகுதிக்கு திருவள்ளூரிலிருந்து மீண்டும் 50 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தேர்தல் அலுவலர்கள் கொண்டுவந்துள்ளனர். கோவை, திருவள்ளூரிலிருந்து தேனிக்கு புதிதாக கொண்டு வரப்பட்ட, வாக்குப்பதிவு இயந்திரங்களை உடனே நீக்க வேண்டும். தேனியில் நியாயமான மறுவாக்குப்பதிவை நடத்த வேண்டும்.’
காங்கிரஸ் சார்பில் இவ்வாறு புகார் கூறப்பட்டுள்ளது.