யார் ஜோக்கர் என்பது தேர்தலின் முடிவில் தெரிய வரும் என ஆ.ராசாவுக்கு பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பதிலடி கொடுத்துள்ளார். 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராஜேந்திர பாலாஜி, ‘’தகுதியில்லாதவருடன் விவாதிக்க தயாரில்லை என ஆ.ராசா கூறியுள்ளார். நானும் தகுதியில்லாதவருடன் விவாதம் நடத்த தயாரில்லை. ஆ.ராசாவுக்கு தகுதி கிடையாது. நான் காரில் செல்வது குறித்து பேசுகிறார். அவர் கஷ்டப்பட்டு வேலை செய்து சம்பாதித்தது போன்று பேசுகிறார். அவருடைய குற்றம், குறைகளை நாடறியும். அவருடன் விவாதிக்க எனக்குப் பிடிக்கவில்லை. என்னை ஜோக்கர் என கூறுகிறார். நான் ஜோக்கரா? அவர் ஜோக்கரா? என்பது தேர்தலில் முடிவாகும்.

பிறரை அவமானப்படுத்திப் பேசுவது திமுக பிரமுகர்களுக்கு கைவந்த கலை. தன்னை மட்டும் நிரபராதி என ஸ்டாலின் பேசுகிறார், நடிக்கிறார். அதிமுக ஆன்மிக கட்சி. ஈபிஎஸ் - ஓபிஎஸ் மனசாட்சிக்கு விரோதமாக எதையும் செய்ய மாட்டார்கள். மற்றவர்களை துன்புறுத்தி அதில் நாங்கள் இன்புற மாட்டோம்.
பக்தவச்சலம், ராஜாஜி, இந்திராகாந்தி என எல்லோரையும் கருணாநிதி கிண்டலாக பேசியுள்ளார். அந்த மாதிரி நாங்கள் பேசவில்லை. ஸ்டாலின் எங்கள் தலைவரை ஒருமையில் பேசுகிறார். பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார். அதற்கு பதில் சொல்ல வேண்டிய இடத்தில் நான் இருக்கிறேன். நாங்கள் எந்த ஆயுதத்தைக் கையில் எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்பவர்கள் அவர்கள்தான்.

எங்களிடம் நியாயம் இருக்கிறது. அவர்களிடம் அநியாயம் இருக்கிறது. நாங்கள் உண்மையை உரக்கச் சொல்கிறோம். என்னுடன் விவாதிக்க தயாராக இல்லையென்றால் ஆ.ராசா மீது தவறிருக்கிறது. சிபிஐ, அமலாக்கத்துறைதானே சிறையில் அடைத்தது. அவருக்கு பெயரே 'ஸ்பெக்ட்ரம்' ஆ.ராசா தானே. உத்தமர் வேடம் போடுகிறார்.

ஆன்மிக அரசியலை வழிநடத்துவதுதான் ஆன்மிக கட்சி. ஆன்மிகம் மதத்தை சார்ந்தது அல்ல. இறைவனை சார்ந்தது. முதல்வர் பழனிசாமி பல மதங்களின் கடவுள்களை வணங்குகிறார். நாங்கள் சமதர்மத்தைக் கடைப்பிடிக்கிறோம். எங்கள் கட்சி ஆன்மிக கட்சி, ஆட்சி ஆன்மிக ஆட்சி. எம்ஜிஆர் - ஜெயலலிதா ஆட்சி சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. எங்கள் கொள்கைகள், தலைவர்களை அவருக்குப் பிடித்திருக்கலாம். அதற்காக அவர் முன்னிலைப்படுத்தியிருக்கலாம். அதில் தவறேதும் இல்லை.

திமுக கூட்டணிக் கட்சிகளிடத்தில் ஒருங்கிணைப்பு கிடையாது. ஸ்டாலின் பின்னால் இருப்பவர்கள் அவரை வெறுக்கிறார்கள். கோமாளித்தனமாக பேட்டி கொடுக்கிறார். எங்கள் தலைவர்களை உதாசீனப்படுத்தும் ஸ்டாலினை நாங்கள் விமர்சிக்கத்தான் செய்வோம். என்னுடைய பாணியில் நான் பேசுவேன். 
பல திட்டங்களை கொண்டு வந்தது அதிமுக. நாங்கள் போட்ட சாலைகளில் சென்றுகொண்டே எங்களை குறை சொல்கிறார். அநியாய குற்றச்சாட்டுகளை சொல்லக்கூடாது. யாரையும் அசிங்கப்படுத்திப் பேசும் எண்ணம் எனக்குக் கிடையாது.

கட்சி ஆரம்பிக்கும்போது அதிமுகவுடன் கூட்டணி செல்லவிருக்கிறோம் என யாராவது சொல்வார்களா? அழியப்போகும் கட்சி திமுகவாகத்தான் இருக்கும். கட்சி ஆரம்பிக்கும்போது தொண்டர்களை உற்சாகப்படுத்த ஏதாவது கொள்கைகளை சொல்லத்தான் வேண்டும். இதைவிட நல்லாட்சி கொடுக்க முடியும் என்றுகூட அவர் நினைக்கலாம். முதல்வர் அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்கிறார். உறங்காமல் களத்தில் சென்று பயிர் சேதங்களை பார்வையிட்டார். டெல்டா மாவட்டங்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கிறார்.

பாட்ஷா படத்திற்கு பிறகு ரஜினி கட்சி ஆரம்பித்திருந்தால் அவர் இன்றைக்கு எங்கேயோ சென்றிருப்பார். அன்றைக்கிருந்த ரஜினியின் ஸ்டைல் வேறு. இன்றைக்கு வயதாகிவிட்டது. கட்சி ஆரம்பித்தபிறகுதான் கொள்கைகள் தெரியும். எங்களுக்கு எதிரி திமுக தான். காங்கிரஸ் அரசில் ஏன் நீர்ப்பாசனத்துறையை திமுக கேட்கவில்லை? அதில் பணம் பார்க்க முடியாது. அதனால் தான் திமுக தொழில்நுட்பத்துறையைக் கேட்டது. ரஜினி ஆரசியலுக்கு வந்தது அற்புதம்தான். எங்களுக்கு அதனால் தாக்கம் கிடையாது. ஆ.ராசாவின் தவறுகளை சுட்டிக்காட்டாமல் அவருக்கு பதில் கூறுமாறு ஸ்டாலின் எங்களுக்குக் கூறுகிறார்’’ என அவர் தெரிவித்தார்.