டெல்லியில் காங்கிரஸ் படுதோல்வி அடைய முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் தான் முக்கிய காரணம் எனக்கூறி டெல்லி காங்கிரஸ் பொறுப்பாளர் பதவியை பி.சி. சாக்கோ ராஜினாமா செய்துள்ளார்.

டெல்லி சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கட்சியின் மூத்த தலைவரும் டெல்லி மாநில பொறுப்பாளருமான பி.சி. சாக்கோ, ஷீலா தீட்சித் முதல்வராக இருக்கும்போதே காங்கிரசின் வீழ்ச்சி தொடங்கி விட்டதாகக் கூறி ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார். 
 
ஷீலா தீட்சித் கடந்த ஆண்டு காலமானார். டெல்லி காங்கிரஸ் தலைவராக இருக்கும் சுபாஷ் சோப்ராவும் ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார். பி.சி.சாக்கோ இதுகுறித்து கூறுகையில், 'டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சி கடந்த 2013-ல் ஷீலா தீட்சித் முதல்வராக இருக்கும்போதும், ஆம் ஆத்மி தொடங்கப்பட்டது. காங்கிரசின் வாக்கு வங்கியை ஆம் ஆத்மி கட்சி பறித்துக் கொண்டது. நம்மால் அந்த வாக்கு வங்கியை மீட்டெடுக்க முடியவில்லை. இப்போதும் நம்முடைய வாக்கு வங்கி ஆம் ஆத்மியிடத்தில் உள்ளது' எனத் தெரிவித்துள்ளார்.

 

பி.சி. சாக்கோவின் கருத்துக்கு காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான மிலிந்த் தியோரா கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், 'ஷீலா தீட்சித் மிகச்சிறந்த நிர்வாகி, அரசியல்வாதி. அவர் டெல்லி முதல்வராக இருந்த சமயத்தில் டெல்லியில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. காங்கிரஸ் கட்சி அவரது காலத்தின்போது முன்னெப்போது இருந்ததை காட்டிலும் பலமாக இருந்தது. அவரது மறைவுக்கு பின்னர் அவரை  சிலர் விமர்சிப்பது துரதிருஷ்வசமானது. ஷீலா தீட்சித் தனது வாழ்வை காங்கிரசுக்கும், டெல்லி மக்களுக்கும் அர்ப்பணித்தவர்' என்று கூறியுள்ளார். 

டெல்லி முதல்வராக ஷீலா தீட்சித் 3 முறை இருந்துள்ளார். டெல்லியின் காங்கிரஸ் முகமாக அவர் அறியப்படுகிறார். 2013-ல் ஷீலா தீட்சித்திடம் இருந்து ஆரம்பிக்கப்பட்டு ஒரே ஆண்டு ஆன ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைப் பறித்துக் கொண்டது. முதலில் ஆம் ஆத்மிக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்தது. இருப்பினும், ஆட்சி நிலைக்க சாதகமான சூழல் இல்லாததால் கெஜ்ரிவால் தனது பதவியை 49 நாட்களிலேயே ராஜினாமா செய்தார்.  தன்பின்னர் நடைபெற்ற 2 தேர்தல்களில் ஆம் ஆத்மி ஆட்சியை பிடித்தது. காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

81 வயதான ஷீலா தீட்சித் கடந்த ஆண்டு காலமானார். முன்னதாக அவர் கட்சிக்குள் இருக்கும் கோஷ்டி மோதல் குறித்து ராகுல் காந்தி, சோனியா காந்தியிடம் புகார் அளித்திருந்தார். நேற்று டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில் ஆம் ஆத்மி 70-ல் 63 தொகுதிகளை கைப்பற்றியது. காங்கிரசுக்கு டெபாசிட் கூட கிடைக்கவில்லை. அதாவது பதிவான வாக்குகளில் 6 சதவீதத்தைக்கூட காங்கிரஸ் பெறத் தவறி விட்டது.