*    சசிகலாவிடம் கேட்டுதான் நான் பொதுச்செயலாளராக பதவியேற்றுள்ளேன். சசிகலாவிற்காக எங்கள் கட்சியின் தலைவர் பதவி காலியாகவே உள்ளது: டி.டி.வி. தினகரன். 
(தல, நீ கில்லாடிக்கு கில்லாடி தல. அ.தி.மு.க. வகையறாவை பொறுத்தவரைக்கும் பொதுச்செயலாளர் பதவிக்குதான் மரியாதையே. தலைவர் பதவியெல்லாம் ச்சும்மா டம்மிக்கு கடைசி தொண்டன் வரைக்கும் தெரிஞ்ச விஷயம்தான். அப்படியிப்படி ரூட்ட விட்டு கட்ட கடைசியில தியாக தலைவி சின்னம்மாவையே கட்டங்கட்டிட்டியே தல.)

*    இதுவரை நடந்த தேர்தல்களில், எதிர்க்கட்சிகள் மீது வருமான வரித்துறை கட்டவிழ்த்து, ஏவியதே கிடையாது. இந்தியாவில் இதுவே முதல் முறை: துரைமுருகன். 
(சர்தான் பொருளாளரே.... ஆனா உங்க கட்சிக்காரங்க ...இதுவரைக்கும் கதிர் ஆனந்த் கட்சிக்கு வேலை பார்த்ததில்ல, இதுவரைக்கும் கதிர் ஆனந்த் கொடி பிடிச்சு ஒரு போராட்டம் பண்ணினதில்லை, இதுவரைக்கும் கதிர் ஆனந்த் கட்சிக்காக சிறை போனதில்லை!-ன்னு சொல்றாங்களே. இதுக்கு முதல் முறையா ஒரு ஓப்பன் பதிலை சொல்லுங்களேன் பார்ப்போம்.)

*    வேலூரில் ஏன் தேர்தல் ரத்து செய்யப்பட்டது? என்பதற்கு, தேர்தல் ஆணையம் மிகப்பெரிய விசாரணையை நடத்தி விளக்கத்தை  தந்துள்ளது. இருந்தாலும் குறிப்பிட்ட அந்த நபரை நீக்கிவிட்டு தேர்தலை நடத்தியிருக்கலாம்: அன்புமணி. 
(பாஸு கொஞ்சம் பொறுங்க. ‘வாக்குச்சாவடியில நாமதான் இருப்போம். புரியுதா?’ன்னு நீங்க பேசுனதையும், தர்மபுரியில சில வாக்கு சாவடிகளில் கள்ள ஓட்டு போட்டிருக்காங்கன்னும் தி.மு.க. பெரிய தாக்கீதை கொடுத்திருக்குது. அதுக்கு இன்னா பதில் வருதுன்னு பார்த்துட்டு அப்பாலிக்கா முடிவு பண்ணிக்கலாம்.)

*    கன்னியாகுமரி நாடாளுமன்றத்தை பொறுத்தவரையில் இந்த தேர்தலில் மவுன புரட்சி நடந்துள்ளது. தொகுதியில் பல இடங்களில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்படாத விஷயத்தில் தேர்தல் அலுவலர்கள் தவறு செய்துள்ளனர். தேர்தல் ஆணைய பணிகள் ஓரளவே திருப்தி அளித்தன: பொன்.ராதாகிருஷ்ணன். 
(சர்தான், ஸ்மால் கர்ம வீரர் ஏதையோ மோப்பம் பிடிச்சுட்டு, யார் மேலேயோ காண்டாகி, என்னவோ பேச ஆரம்பிச்சுட்டார். வசந்தகுமாரு, சூதானமா ரெடியாகிடுங்க மக்களே.)

*    எதிர்கட்சி தலைவர் ரங்கசாமி வீட்டில் நடந்த வருமானவரிச் சோதனைக்கும் எங்களுக்கும் எந்த சம்பதமுமில்லை. வருமான வரித்துறையை கையில் வைத்திருக்கும் பா.ஜ.க. கூட்டணியில்தானே ரங்கசாமி இருக்கிறார்: முதல்வர் நாராயணசாமி. 
(தல, எதுக்கும் ஒரு பதினஞ்சு நாள் நல்லா யோசிச்சுட்டு இந்த ஸ்டேட்மெண்டை நீங்க கொடுக்குறது நல்லது.)

*    தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் இ.பி.எஸ். தன் அன்பான பேச்சால், நாகரிக உரையால் மக்களைக் கவர்ந்தார். ஆனால் ஸ்டாலினோ, ஆட்சியை கவிழ்க்கும் வெறியில், கொடூர பேச்சால் மக்களின் ஆதரவை இழந்துள்ளார்: ராஜேந்திர பாலாஜி
(ஆமாண்ணே, எதுக்கும் ‘பத்தே நாளில் மக்களை கவரும் பேச்சாளர் ஆவது எப்படி? பலனில்லை என்றால் ஃபீஸ் வாபஸ்’ அப்படின்னு ஒரு போர்டு போட்டு நீங்க வேணும்னா ஸ்டாலினுக்கு ஒரு டியூஸன் எடுங்களேண்ணே. செம்மையா இருக்கும்லா?!)