கொரோனா பரவல் குறைந்ததன் காரணமாகவே கூட்டங்கள் நடத்த தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதாகவும், முதலமைச்சர் பிரச்சாரம் நடத்துவதற்காக அளிக்கப்படவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில், ஆதரவற்ற முதியவர்களுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ள புதிய வார்டினை சுகாதாரத்துறை அமைச்சர் இன்று துவக்கி வைத்தார். மேலும் முதியோர்களை பாதுகாப்பது மற்றும் பராமரிப்பது உள்ளிட்டவை அடங்கிய புத்தகத்தையும் அவர் வெளியிட்டார். இந்நிகழ்வில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கூறியதாவது:  

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் ஆதரவற்ற நபர்களுக்கு என 40 படுக்கைகள் கொண்ட புதிய வார்டு துவங்கப்பட்டுள்ளதாகவும், ரூ.20 கோடி மதிப்பீட்டில் புற்றுநோய்க்கு கதிர்வீச்சு சிகிச்சை அளிக்கும் வகையில் அவசர சிகிச்சை மையம் துவங்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். பொதுமக்கள் புருவத்தை உயர்த்தி ஆச்சரியப்படும் வகையில் ஒட்டுமொத்த சுகாதாரத் துறையும் செயல்பட்டு வருவதாக அவர் பெருமிதம் தெரிவித்தார். அதேபோல் ஐஐடி, அண்ணா பல்கலை. உள்ளிட்டவற்றில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, அனைத்து கல்லூரிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளத என்றார். அதுமட்டுமின்றி பொது சுகாதார விதிகளை பின்பற்றாத கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறி உள்ளார். 

கொரோனா பரவல் காரணமாக கல்லூரிகள் தற்காலிகமாக மூடப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், கல்லூரிகளை மூடும் நிலை இல்லை எனவும் பிற நாடுகளை விட, பிற மாநிலங்களைவிட தீவிர சிகிச்சைகளையும், துரித நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது என்பதால் கொரோனா தொற்று பரவல் மிகவும் குறைந்துள்ளது என்றார். மேலும், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிலம் வழங்கப் படவில்லை என்ற எதிர்கட்சியினர் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவர், நிலம் அளிக்கப்படவில்லை என்ற தகவலில் உண்மையில்லை எனவும் நிலமளிக்காமல் எப்படி பணிகளை மேற்கொள்ள முடியும் எனவும் கேள்வி எழுப்பிய அவர், எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவித்தார். 

 

தமிழக அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் முழு கட்டணத்தையும் அரசே ஏற்கும் என்று ஏற்கனவே கூறப்பட்டுள்ளது என்றும், இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெற இருக்கிறது என்றார்.அதில் காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்களுக்கு இடம் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது என்றார், அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாகவும் நிதித் துறையுடன் கலந்து பேசி கூடிய விரைவில் நல்ல தீர்வு காணப்படும் எனவும் கூறினார்.

கொரோனா பரவல் காரணமாக பொதுமக்கள் கூட்டம் கூட தடை விதிக்கப்பட்டருந்த நிலையில் தற்போது முதல்வர் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டி தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருவதாகவும் குறிப்பிட்ட மாவட்டங்களில் கொரோனா தொற்றே இல்லை எனவும் தெரிவித்த அவர் இதன் காரணமாகவே தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், முதல்வருக்காக எந்த தளர்வுகளும் தனியாக வழங்கப்படவில்லை எனவும் கூறினார்.