எழுச்சி நாயகனாக வருங்கால அரசியலில் மாபெரும் தலைவனாக எதிர்பார்க்கப்பட்ட டி.டி.வி.தினகரனை இந்தத் தேர்தல் படுகுழியில் தள்ளி இருக்கிறது. 

எடப்பாடி- ஓபிஎஸ் வசம் இருக்கும் அதிமுகவை இந்தத் தேர்தலுக்கு பிறகு கைப்பற்றி விடவேண்டும். அதற்கு 22 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியை கவிழ்த்து கட்சியை தங்கள் வசப்படுத்த வேண்டும் என பலமான திட்டம்போட்டு வந்த டி.டி.வி.தினகரன் அணியின் எண்ணத்தில் மண்ணள்ளி போட்டு விட்டது தேர்தல் முடிவுகள். இந்தத் தேர்தல் அள்ளி எடுத்து விடலாம் எனக் காத்திருந்த டி.டி.வியால் கிள்ளிக்கூட எடுக்க முடியவில்லை. அந்தோ பரிதாபம், கமல் கட்சி, நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்குகளை விட சில தொகுதிகளில் குறைவாகவே பெற்று அதாள பாதாளத்திற்கு தள்ளப்பட்டுள்ளது அமமுக. 

டோட்டல் வாஷ் அவுட்டான அமமுக ’’4 தொகுதிகளிலாவது வெற்றி பெறும். இந்த ஆட்சியை திமுகவுடன் இணைந்து ஆட்சியை கவிழ்ப்போம். துரோகிகளை வீழ்த்துவோம். டி.டி.வி.தினகரன் தலைமையில் ஆட்சி அமைப்போம். இனி தமிழகத்தின் எதிர்காலம் டி.டி.வி.தினகரன் தான். இந்தத் தேர்தலோடு எடப்பாடி பழனிசாமியை வீட்டுக்கு அனுப்பி வைப்போம்’’என முழங்கி வந்தது அமமுக. ஆனால், வெற்றி பெறாவிட்டாலும் ஒரு தொகுதியில் கூட குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு வாக்குகளை பெறவில்லை. 

அதிமுகவுக்கு ஈடாகப்பார்க்கப்பட்ட அமமுக மூன்றாவது கட்சியாகக் கூட வரவில்லை. இது தினகரன் தரப்பிற்கு பேரதிர்ச்சியையும் அதிமுகவுக்கு பெருத்த நிம்மதியையும் ஏற்படுத்தி உள்ளது. குறைவான வாக்குகள் பெற்றதன் மூலம் உண்மையில் டி.டி.வி.தினகரனுக்கு மக்கள் ஆதரவு இல்லை. இனி அவரை நம்பி மாற்றுக் கட்சியினர் யாரும் செல்ல மாட்டார்கள். இன்னும் சொல்லப்போனால் அவருடன் சென்ற அதிமுகவினரே மீண்டும் கட்சிக்கு திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. 

ஆக மொத்தத்தில் டி.டி.வி.தினகரனின் அரசியல் எதிர்காலம் பெரும் கேள்விக்குறியாகி உள்ளது. இனி அதிமுக என்றால் எடப்பாடி- ஓபிஎஸ் தலைமைதான் என்பது இந்தத் தேர்தல் மூலம் தெரிய வந்துள்ளது.