புதுமாப்பிள்ளையை கொலை செய்து, உடலை கூறுபோட்டு புதைத்த சினிமா ஸ்டன்ட் மாஸ்டரை கைது செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த வெண்புருஷம் சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் கார்த்திக் (27). இவரது மனைவி ரங்கீலா (21). இவர்களுக்கு கடந்த செப்டம்பர் 15ம்தேதி மாமல்லபுரத்தில் திருமணம் நடந்தது.
ரங்கீலாவுக்கும் அவரது உறவுமுறை சகோதரி ரஞ்சிதா (25) என்பவருக்கும் பூர்வீக சொத்து பிரிப்பதில் முன்விரோதம் இருந்தது. ஆனால், ரங்கீலா, தனக்கு உரிய சொத்தின் பாகத்ைத ரஞ்சிதாவும் அவரது கணவர் டில்லிபாவும் தர மறுக்கின்றனர் என்று கணவர் கார்த்திக்கிடம் கூறியுள்ளார்.

இதனால் டில்லிபாபுவிடம் தனது மனைவிக்கு உரிய பங்கை பிரித்து கொடுக்கும்படி கார்த்திக் கேட்டுள்ளார். அதற்கு டில்லிபாபு, பேசி தீர்வு காணலாம் என்று கூறியுள்ளார்.
இதன்படி, கடந்த மாதம் 8ம் தேதி சூளேரிகாடு கிராமத்தில் உள்ள டில்லிபாபு வீட்டுக்கு கார்த்திக் சென்றுள்ளார். அதன்பிறகு கார்த்திக் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றம் அடைந்த ரங்கீலா அக்கா ரஞ்சிதாவிடம் கார்த்திக் பற்றி கேட்டுள்ளார். கார்த்திக், தனது வீட்டுக்கு வந்துவிட்டு சென்றுவிட்டதாக கூறியுள்ளார்.
இதன்பிறகு பல இடங்களில் தேடியும் கார்த்திக்கை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே, கடந்த 23ம் தேதி ரங்கீலா, மாமல்லபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்ைக தேடி வந்தனர். கடந்த 25ம் தேதி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் டில்லிபாபு சரணடைந்தார். அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர்.
அப்போது டில்லிபாபு கூறுகையில், ‘‘சொத்தை பிரிப்பதற்காக என் வீட்டுக்கு வந்த கார்த்திக்கை மது அருந்தலாம் என அழைத்துக்கொண்டு செங்கல்பட்டு அருகே மாமண்டூர் பாலாற்றுக்கு அழைத்து சென்றேன். அங்கு வைத்து அவருக்கு மது வாங்கிக்கொடுத்து அடித்து கொன்று உடலை துண்டுதுண்டாக வெட்டி புதைத்துவிட்டேன்’’ என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து நேற்று முன்தினம் காலை முதல நேற்று மாலை வரை பாலற்று பகுதியான மதுராந்தகம், செங்கல்பட்டு எல்லையில் சடலத்தை தேடினர். பின்னர், மாமண்டூர் பாலாற்றங்கரையில் கார்த்திக்கை கொன்று சடலத்தை புதைத்த இடங்களை டில்லிபாபு அடையாளம் காட்டினார்.
இதைதொடர்ந்து செங்கல்பட்டு ஆர்டிஓ பன்னீர்செல்வம், மாமல்லபுரம் டிஎஸ்பி சேகர் மற்றும் செங்கல்பட்டு மருத்துவமனை டாக்டர்கள் முன்னிலையில் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.

அப்போது, கார்த்திக்கின் உடல் துண்டுதுண்டாக கூறு போட்டு வெட்டப்பட்டு கை, கால்கள், தலை என தனித்தனியாக வெவ்வேறு இடத்தில் புதைத்து வைத்தது தெரிந்தது. அவர் காட்டிய இடங்களில் எல்லாம் உடலின் பல்வேறு பாகங்கள் தோண்டி எடுக்கப்பட்டது. உடலின் பாகங்களை பொட்டலமாக கட்டி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு நேற்று கொண்டு சென்றனர்.
இதில் கொலையாளியின் மனைவி ரஞ்சிதாவுக்கும் தொடர்புள்ளதா எனவும் மாமல்லபுரம் போலீசார் விசாரிக்கின்றனர். கொலையாளி டில்லிபாபு தமிழிலில் வெளியான ‘முகமூடி, கிரீடம்’ உள்ளிட்ட 3 தமிழ்ப்படங்களில் ஸ்டன்ட் மாஸ்ட்ராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
