புத்துணர்ச்சி சிகிச்சைக்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரைவில் கேரளா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

14 நாள் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு தமிழகம் திரும்பிய எடப்பாடியார் சேலம் சென்று அங்கு ஓய்வில் இருந்து வருகிறார். 14 நாட்கள் விமானம், கார், பேருந்து, ரயில் என பயணத்திலேயே பெரும்பாலான பகுதிகள் கழிந்துள்ளது. இதனால் ஏற்பட்ட ஜெட் லாக் சரியாகவே எடப்பாடியாருக்கு ஒரு நாள் ஆனதாக சொல்கிறார்கள். 

தற்போது வெளிநாடு பயணம் முடிந்த நிலையில் மீண்டும் முதலமைச்சர் பணிகளை முழுவீச்சில் எடப்பாடி கவனித்து வருகிறார். இந்த நிலையில் உடல் புத்துணர்ச்சிக்காக கோவையில் உள்ள ஆயுர்வேத மையம் ஒன்றில் சிகிச்சை எடுத்துக் கொள்ள எடப்பாடி தரப்புக்கு சிலர் ஆலோசனை வழங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுடன் அரசு ரீதியலான ஒரு சந்திப்பு நீண்ட நாட்களாக பெண்டிங்கில் இருந்து வருகிறது. 

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாகவும் வேறு சில நதி நீர் மற்றும் அணை பராமரிப்பு விஷயங்கள் தொடர்பாகவும் பினரயி விஜயனை நேரில் சந்தித்து பேச முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக கேரளா செல்லும் போது அம்மாநில ஆயுர்வேத புத்துணர்ச்சி சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம் என்று அதிகாரிகள் கூறியதாக சொல்லப்படுகிறது. இதனை அடுத்து இதற்கு ஏற்ற வகையில் எடப்பாடியின் கேரள சுற்றுப்பயண விவரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. 

சுமார் மூன்று முதல் நான்கு நாட்கள் கேரளாவில் தங்கியிருந்து எடப்பாடியார்  இந்த சிகிச்சையை மேற்கொள்வார் என்கிறார்கள். கேரளாவில் ஸ்டாலின் சென்று சிகிச்சை எடுக்கும் அதே மையத்திற்கு தான் எடப்பாடியாரும் செல்கிறார் என்கிறார்கள். இந்த சிகிச்சையின் மூலம் முதுகுவலி மற்றும் மனச்சோர்வு நீங்கும் என்பது தான் ஹைலைட்டாம்.