கடந்த ஆண்டு சசிகலா குடும்பத்திற்கு எதிரான தர்மயுத்தம் நடத்திக் கொண்டே தினகரனை ஓ.பி.எஸ் சந்தித்தது ஏன் என்று புதிய தகவல் வெளியாகியுள்ளது.

முதலமைச்சராக சசிகலா பதவி ஏற்பதற்கான முயற்சி நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் திடீரென ஓ.பி.எஸ் ஜெயலலிதா சமாதியில் இருந்து கடந்த ஆண்டு தர்மயுத்தத்தை தொடங்கினார். சசிகலா குடும்பத்திடம் இருந்து அ.தி.மு.கவை மீட்கப்போவதாக அறிவித்து தனது ஆதரவாளர்களை வைத்துக் கொண்டு அவ்வப்போது போராட்டம், பொதுக்கூட்டம் என்றெல்லாம் ஓ.பி.எஸ் செயல்பட்டுக் கொண்டிருந்தார்.

இந்த சமயத்தில் ஈ.பி.எஸ் – தினகரன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தினகரனை அ.தி.மு.கவில் இருந்து ஒதுக்கி வைப்பதாக ஈ.பி.எஸ் அணியும் அறிவித்தது. இதனை தொடர்ந்து ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ் அணிகளை இணைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்றன. ஆனால் அமைச்சரவையில் இடம் ஒதுக்கீடு, கட்சிப் பதவிகளை பிரித்துக் கொள்வதில் இழுபறி நீடித்துக் கொண்டிருக்கிறது. திரைமறைவில் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் அணிகள் இணைப்பு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்தது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred



ஆனால் முதலமைச்சர் பதவியை முதலில் ஓ.பி.எஸ் கேட்டதாகவும் அதற்கு ஈ.பி.எஸ் மறுத்துவிட்டதாகவும் அப்போது தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து துணை முதலமைச்சர் பதவியாவது வேண்டும் என்று ஓ.பி.எஸ் தரப்பு பேச்சுவார்த்தையை முன்னெடுத்த நிலையில் அதற்கும் எடப்பாடி தரப்பு உடன்படாத சூழல் நிலவியது. இந்த நிலையில் தான் கடந்த ஆண்டு ஜுலை மாதம் தினகரன் – ஓ.பி.எஸ் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

அதாவது ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ் அணிகள் இணைப்பு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிகழ்ந்தது. அதற்கு ஒரு மாதத்திற்கு முன்னதாக அதாவது ஜுலையில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. இதற்கான காரணம் என்ன என்று ஓ.பி.எஸ் தரப்புக்கு நெருக்கமானவர்கள் கசியவிட்டுள்ளனர். அதாவது எடப்பாடி அணியுடனான பேச்சுவார்த்தையின் போது ஓ.பி.எஸ் தரப்புக்கு மிகுந்த பின்னடைவு ஏற்பட்டதாகவும், அந்த பின்னடைவை சரி செய்ய தினகரனுடனான சந்திப்பை ஓ.பி.எஸ் பயன்படுத்திக் கொண்டதாகவும் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.