தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியைத் அடுத்த குருவிக்கரம்பையைச் சேர்ந்தவர் கருணாநிதி என்னும் கருணாஸ். பாப் இசை பாடல்கள் மற்றும் கானா பாடல்களில் புகழ் பெற்ற பிறகு, கருணாநிதி எனும் தனது இயற்பெயராக ஸ்டைலாக கருணாஸ் என மாற்றி வைத்துக் கொண்டார்.

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த கருணாஸ், நந்தனம் மற்றும் மாநிலக் கல்லூரிகளில் படித்தவராவார். பின்னர், தமிழ் நாட்டுப்புறப் பாடல்கள் மற்றம் கானா பாடல்களைப் பாப் இசைப் பாடல் போல மாற்றிப்பாடுவதில் சிறிது புகழ் பெற்றார். ஆரம்ப காலத்தில் சிந்தாதரிப்பேட்டை பகுதியில் மெக்கானிக் ஷெட்டுகளில் 2 வீலர் மெக்கானிக்காக பணிபுரிந்தும் இருக்கிறார். 

கல்லூரி படிப்பிற்குப் பிறகு கானா பாடல்களில் புகழ் பெற்ற கருணாஸ், பிரபல நடிகர் யூகி சேதுவின் பிரபலமான விஜய் டிவி ஷோவான நையான்டி தர்பாரில் பாடல்கள் பாடும் குழுவில் இடம் பெற்றிருந்தார். அதன் மூலம் திரை வெளிச்சத்துக்கு கருணாஸ் வெளியே வந்தார். பின்னர், டைரக்டர் பாலா மூலமாக 2001 ஆம் ஆண்டு வெளியான நந்தா என்ற திரைப்படத்தில் லொடுக்கு பாண்டி கேரக்டர் மூலமாக சினிமாவிலும் நடிக்க ஆரம்பித்தார்.

அதன் பிறகு பாபா, பிதாமகன், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்., பொல்லாதவன் என தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதன் பிறகு சன் டிவி கலாநிதி மாறன் மூலமாக கருணாசுக்கு சுக்ர திசை அடிக்க ஆரம்பித்தது. சன் பிக்சர்ஸ் மூலமாக படங்களை விநியோகம் செய்யும் வேலையையும் ஆரம்பித்தார். 2008 இல் இருந்து 2011 ஆம் ஆண்டு வரை பெரும்பாலான நேரமும், சன் டிவி மந்தைவெளி அலுவலகத்திலேயே, சன் பிக்சர்ஸ்-ஐ சேர்ந்த சக்சேனா, ஐயப்பன் ஆகியோருடனுமே இருப்பார்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் அனைத்து படங்களின் உரிமைகளையும் வாங்கி, ஒரு சில மாவட்டத்தில் விநியோகம் செய்து வந்ததால் அவருக்கு, பணம் அதிக அளவில் புரள ஆரம்பித்தது. பி.எம்.டபியுள்யூ. கார், வீடு என கொடி கட்டி பறந்தார் கருணாஸ். பின்னர், திண்டுக்கல் சாரதி என்ற படத்தை சொந்தமாக கருணாஸ் எடுத்தார். மிகப்பெரிய வெற்றி அடைந்த இந்த படத்தின் பின்புலத்தில் சன் பிக்சர்ஸ் இருந்தது. தொடர் வெற்றிகள் கொடுத்த ஊக்கம் காரணமாக கருணாஸ் அம்சமுத்திரம் அம்பானி, சந்தமாமா உள்ளிட்ட படங்களை சொந்தமாக எடுத்தார்.

இப்படங்கள் கருணாசுக்கு மிகப்பெரிய அளவில் தோல்வியையும் பொருளாதார நட்டத்தையும் கொடுத்தன. இதன் பிறகு, சேர்த்து வைத்தவற்றை எல்லாம் கருணாஸ் ஒன்றிரண்டு படங்களிலேயே மொத்தமாக விட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார். சக்சேனா, சன் பிக்சர்ஸ் பிரச்சனைக்குப் பிறகு கருணாசும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். அதன் பிறகு பெரும் பொருளாதார சுமை கடன் ஆகியவற்றால் தவித்து வந்தார் கருணாஸ். அப்போதுதான், ஜெ.வின் தோழி சசிகலா ரூபத்தில் அதிர்ஷ்டம் கதவைத் தட்டியது கருணாசுக்கு.

2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய கட்சிகள் அதிமுகவுடன் கூட்டணி தமக்கு கிடைத்து விடாதா, நமது கட்சிக்கும் அதிமுகவின் ஆதரவில் எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்றத்துக்குள் நுழைந்துவிட மாட்டார்களா? என ஏக்கத்தோடு காத்திருந்த வேளையில் ஜாதிக்கொரு கூட்டணி எம்எல்ஏ என்ற கணக்கோடு, சசிகலாவின் ஐடியாவில் உதித்தவர்கள்தான் கருணாஸ், கொங்கு தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோர்.

அந்த வகையில், பிற்காலத்தில் தங்களுக்கு பயனுள்ளவர்களாக இருப்பார்கள் என்ற பெரிய நோக்கத்தோடு கருணாஸ் போன்று அரசியல் பின்புலம் இல்லாத ஆட்களைக் களத்தில் இறக்க சசிகலா முடிவெடுத்ததன் விளைவே இன்று கருணாஸ் எம்.எல்.ஏ.வாக உள்ளார்.

அதற்கு முன்பு முக்குலத்தோர் புலிப்படை என்ற அமைப்பை நிறுவி பெயருக்கு ஒரு சில ஊர்களில் சில உறுப்பினர்களை செயல்பட்டு வந்தது. இந்த நிலையில்தான், கருணாசுக்கு சம்பந்தமே இல்லாத தொகுதியான இராமநாதபுரம் மாவட்டம், திருவாடனையில், ஜெயலலிதாவிடம் போராடி சீட்டை வாங்கிக் கொடுத்தார் சசிகலா.

கருணாசுக்கு சீட்டு வழங்கப்படும் வரை அவர் தீவிர அரசியலில் இருக்கிறாரா இல்லையா என்பதை பலபேருக்கு தெரியாத உண்மையாகும். இப்படித்தான், 2016 தேர்தலின்போது, சினிமா, பாட்டு, கூத்து என்றிருந்த கருணாஸ் திடீர் தீவிர அரசியல்வாதியாகி, எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்று கூவத்தூர் ஃபார்முலாவில் முக்கிய பங்கம் வகித்து முதலமைச்சருக்கும், காவல் துறை அதிகாரிகளுக்கும் கொலை மிரட்டல் விடுக்கும் அளவுக்கு விஸ்வரூபம் எடுத்துள்ளார். கருணாசின், இந்த திடீர் அரசியல் வளர்ச்சி நிச்சயம் ஆச்சரியமான ஒன்றுதான்.