10 கோடி ரூபாய் அபராத தொகையை செலுத்த அனுமதிக்க கோரி பெங்களூரு நகர சிவில் நீதிமன்றத்தில் சசிகலா மனுத்தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா உள்பட மூன்று பேர் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர். 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை முடிவடையும் நிலையில், சசிகலா எப்போது விடுதலையாவார் என்பது குறித்த பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. 

இந்நிலையில், சசிகலா 2021ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி விடுதலையாவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், சசிகலா நன்னடத்தை விதிகளின் கீழ் முன்கூட்டியே விடுதலையாக வாய்ப்பில்லை. அவருக்கு நீதிமன்றம் பிறப்பித்த ரூ.10 கோடி அபராதத்தை செலுத்தியே ஆக வேண்டும். அபராதத்தைக் கட்டத் தவறினால்  2022-ம் தேதி ஜனவரியில் தான் சசிகலா விடுதலையாவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சசிகலா தரப்பில் இந்த அபராத தொகையை கட்ட புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், தாங்கள் அபராத தொகையை கட்ட தயாராக இருப்பதாகவும் எனவே அதற்கான அனுமதியை அளிக்க வேண்டும் என்று சசிகலா தரப்பில் இருந்து வழக்கறிஞர் பெங்களூரு நகர சிவில் நீதிமன்றத்தில் மனுவை தாக்கல் செய்துள்ளனர். இந்த அபராத தொகையை கட்ட கட்டாயம் நீதிமன்றம் அனுமதியை பெறவேண்டும். இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றமானது பெங்களூரு நகர சிவில் நீதிமன்றமாகும். ஆகையால், அந்த நீதிமன்றத்தில் அபராத தொகையை கட்ட தயராக இருக்கிறோம். எங்களிடம் போதிய பணம் உள்ளது என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை தெரிவித்துள்ளனர். 

இந்த மனு சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜசெந்தூர் பாண்டியன் இந்த மனுவை தாக்கல் செய்யவில்லை என்றும், கர்நாடகாவைச் சேர்ந்த உள்ளூர் வழக்கறிஞர் மூலமாக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, தனது அபாரத தொகையை ரூ.10 கோடியை நீதிமன்றத்தில் சுதாகரன் செலுத்தியுள்ள நிலையில், சசிகலாவும் மனுத்தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.