சபாநாயகர் தனபாலுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்கொள்ள எடப்பாடி பழனிசாமி முழு அளவில் தயாராகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் நாளை தொடங்க உள்ளது. மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் மற்றும் அவற்றுக்கு அமைச்சர்கள் பதில் என வழக்கமான நடைமுறைகளை தாண்டி இந்த சட்டமன்ற கூட்டத் தொடர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் நாடாளுமன்ற தேர்தலில் படு தோல்வியை அதிமுக சந்தித்த பிறகு நடைபெறும் முதல் கூட்டத் தொடர் இதுவாகும். மேலும் சபாநாயகருக்கு எதிராக திமுக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை வேறு கொடுத்துள்ளது. 

இந்த தீர்மானம் சட்டப்பேரவை செயலகத்தின் ஆய்வில் உள்ளது. இடைத்தேர்தலில் ஒன்பது இடங்களில் வென்று ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் அளவிலான எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையை அதிமுக பெற்றுவிட்டது. ஆனாலும் கூட அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர் பதவியை எதிர்பார்த்து காத்திருக்கும் எம்.எல்.ஏ.க்கள் என ஒரு சிலர் தொந்தரவு செய்து வந்தன. இதே போல் அதிமுக சின்னத்தில் வெற்றி பெற்ற கருணாஸ் மற்றும் தமிமுன் அன்சாரியும் கூட எடப்பாடிக்கு எதிரான நிலையில் இருந்தனர். 

இந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக அதிருப்தியில் இருந்த எம்.எல்.ஏ.க்களை எடப்பாடி பழனிசாமி நேரடியாக தொலைபேசி மூலமாகவும் சிலரை தனது வீட்டிற்கே அழைத்தும் பேசியதாக சொல்கிறார்கள். குறிப்பாக தோப்பு வெங்கடாசலத்தை நேரில் அழைத்து பொறுமை காக்குமாறும் அதற்கு பலனாக வேறு சில விஷயங்களை செய்து கொடுப்பதாகவும் எடப்பாடி தரப்பில் வாக்குறுதி கொடுக்கப்பட்டுள்ளது. 

இதே போல் கருணாஸ் மற்றும் தமிமுன் அன்சாரி தொகுதிகளில் சில நலத்திட்டங்கள் ஒரு வார காலமாக சூடுபிடித்துள்ளது. இதற்கான காரணமும் அவர்கள் இருவரும் எடப்பாடியுடன் ஒரு அன்டர்ஸ்டேன்டிங்கிற்கு வந்துவிட்டது தான் என்கிறார்கள். இப்படி அதிருப்தியில் உள்ளவர்களை ஒவ்வொருவராக அணுகி பிரச்சனையை சரி செய்த எடப்பாடி தெம்பாக நாளை சட்டப்பேரவைக்கு செல்ல உள்ளார். 

அதே சமயம் திமுக சபாநாயகருக்கு எதிராக கொடுத்துள்ள நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தும் முடிவிலும் எடப்பாடி உறுதியாக உள்ளதாக சொல்கிறார்கள். ஏனென்றால் தற்போது நம்பிக்கை இல்லா தீர்மானம் நடைபெற்றால் அடுத்த ஆறு மாத காலத்திற்கு மீண்டும் கொண்டு வர முடியாது. தற்போதைய சூழலை பயன்படுத்திக் கொண்டால் 6 மாத காலத்திற்கு அரசிற்கு எந்த பிரச்சனையும் வராது என்று எடப்பாடி கணக்கு போட்டுள்ளார். எனவே தான் நேற்று சபாநாயகரையும் எடப்பாடி சந்தித்து இது குறித்து பேசிவிட்டதாக சொல்கிறார்கள்.