Asianet News TamilAsianet News Tamil

மறு தணிக்கை என்பது ஜனநாயக முறைப்படி தவறு; தயாரிப்பாளர் சங்கம் கண்டனம்!

Re-audit is wrong democratically
Re-audit is wrong democratically
Author
First Published Oct 21, 2017, 6:18 PM IST


மெர்சல் திரைப்படம் ஏற்கனவே தணிக்கை செய்த நிலையில் மறு தணிக்கை செய்ய சொல்வதை ஒருபோதும் ஆதரிக்க மாட்டோம் என்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது. 

விஜய் நடித்து தீபாவளிக்கு வெளியான மெர்சல் திரைப்படம், வெளியீட்டுக்கு முன்பு சந்தித்த பிரச்சனைகளை விட தற்போது அதிகமான பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.

மெர்சல் திரைப்படத்தில் ஜிஎஸ்டி வரிவிதிப்புக்கு எதிரான வசனங்களாக இடம்பெற்றிருப்பதால் அந்த வசனங்களை நீக்க வேண்டும் என்று தமிழக பாஜக
தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

மத்திய பாஜக அரசுக்கு எதிரான தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளதாகவும் அத்திரைப்படத்தில் ஜிஎஸ்டி தொடர்பாக வரும் வசனங்கள் பொய்யான தகவல் எனவும் கொந்தளித்தார் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா. இதேபோல், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனும் மெர்சல் பட வசனத்துக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி, மெர்சல் படத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். இதேபோல், தமிழக அரசியல் கட்சி தலைவர்களும், மெர்சல் படத்துக்கு ஆதரவாக பேசி வருகின்றனர்.

மெர்சல் படத்தை ஆரம்பத்திலேயே சரியாக சென்சார் செய்திருக்க வேண்டும் என்றும், தற்போது மறு சென்சார் செய்ய வாய்ப்பில்லை எனவும் பாஜகவின் எஸ்.வி.சேகர் கருத்து தெரிவித்துள்ளார்.

மெர்சல் படத்துக்கு ஆதரவாக தமிழக அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேபோல் திரையுலகைச் சேர்ந்தவர்களும் மெர்சல் படத்துக்கு ஆதரவு தெரிவித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், மெர்சல் திரைப்படத்தை மறு தணிக்கை செய்ய சொல்வது தவறான முன் உதாரணம் ஆகிவிடும் என தமிழ் திரைப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது. மறு சென்சார் செய்ய சொல்வதை ஒரு போதும் ஆதரிக்க மாட்டோம் எனவும் தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது. 

ஏற்கனவே தணிக்கை செய்த படத்தின் காட்சிகளை நீக்கச் சொல்வது ஜனநாயக முறைப்படி தவறு எனவும் தயாரிப்பாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios