நடிகர் கமலஹாசன் குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பவர் என்றும், ஜெயலலிதா தற்போது இல்லாத நிலையில் கமல் தனது இஷ்டப்படி பேசி வருவதாகவும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

தற்போது நடைபெற்று வரும் ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துவிட்டதாக நடிகர் கமலஹாசன் தெரிவித்தார். இதையடுத்து அவருக்கு எதிராக தமிழக அமைச்சர்கள் கடுமையான சொற்களால் விமர்சனம் செய்து வந்தனர். 

இந்நிலையில் நேற்று கமலஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் ,ஒரு மாநிலத்தில் துயர மற்றும் ஊழல் சம்பவங்கள் நிகழ்ந்தால் அம்மாநில முதலமைச்சர்  ராஜினாமா செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தார்.

தமிழக முதலமைச்சரை எந்த கட்சிகளும் ராஜினாமா செய்ய வலியுறுத்தாதது ஏன்? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

தமிழகத்தில் ஏராளமான குற்றங்கள் நடந்து உள்ளது. என்னுடைய நோக்கமானது சிறந்த தமிழகமாகும். என்னுடைய குரலை வலுவாக்கும் தைரியம் யாருக்கு உள்ளது? 

திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் எனக்கு கருவியாக உதவ வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.  கமலின் இந்த டுவிட்டால் தமிழக அமைச்சர்கள் அவர் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.

இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், இரு அணிகள் இணைப்பு குறித்த முகூர்த்த தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என தெரிவித்தார்.

விரைவில் தேதி முடிவு செய்யப்பட்டு ஒரு நல்ல நாளில் இரு அணிகளும் இணையும் என்றும் அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், நடிகர் கமலஹாசன் குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பவர் என்றும், ஜெயலலிதா தற்போது இல்லாத நிலையில் கமல் தனது இஷ்டப்படி பேசி வருவதாகவும் குற்றம்சாட்டினார்.