இந்தியாவில் இருக்கும் சமஸ்கிருத நிகர்நிலை பல்கலைக் கழகங்களை மத்திய பல்கலைக்கழகளாக மாற்றும் மசோதாவை அண்மையில் பாராளுமன்றத்தில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இது தொடர்பான விவாதத்தில் அதிமுக சார்பாக பங்கேற்றுப் பேசிய தேனி மக்களவை உறுப்பினரும் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகனுமான ரவீந்திரநாத் குமார் சமஸ்கிருதத்தை புகழ்ந்து பேசினார்.

தமிழைப் போலவே சமஸ்கிருதமும் ஒரு பழமையான மொழி என்றும் ஆன்மீகம், சமூகம், ஆரம்ப கால வாழ்க்கை முறை, விண்வெளி, மருத்துவ அறிவியல் என பல்வேறு துறைகளிலும் சமஸ்கிருதத்தில் இலக்கியங்கள் படைக்கப்பட்டதாக கூறினார். சமஸ்கிருத மொழியை பற்றிய ஆய்வுகள் இதுவரையில் செய்யப்படாததால் ஒரு பெரிய வெற்றிடம் ஏற்பட்டு இருப்பதாகவும் எனவே அது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.  சமஸ்கிருத மொழி குறிப்பிட்ட ஒரு பிரிவினரை சாராது என்றும் சாதி, மத, இன வேறுபாடுகளைக் கடந்து அனைவருக்குமானதாக சமஸ்கிருத பல்கலைக்கழகங்கள் வழங்கும் என மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தமிழக மக்கள் சமஸ்கிருதத்தை நேசிக்கும் அதே வேளையில் தமிழை காதலிப்பதாக ரவீந்திரநாத் குமார் குறிப்பிட்டார். அதேபோல பாஜக உறுப்பினர்கள் சமஸ்கிருதத்தை காதலித்தாலும் தமிழையும் நேசியுங்கள் என்று கோரிக்கை விடுத்தார். அதிமுகவின் நிறுவனத்தலைவர் எம்ஜிஆர், ஜெயலலிதா, மற்றும் மக்களவையின் சக உறுப்பினர்களான திமுக எம்பிக்களின் தலைவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோர் தமிழை வளர்க்க கடுமையாக பாடுபட்டதாக தனது பேச்சில் குறிப்பிட்டார். 

மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைத்த ரவீந்திரநாத் குமார்,  பண்டைய தமிழ்ச் சங்கங்களின் மையமாக மதுரை விளங்கியதால் மத்திய தமிழ் பல்கலைக்கழகத்தை மதுரையில் அமைக்க வேண்டும் என்றார்.  சமஸ்கிருத பல்கலைக் கழகங்களை மத்திய பல்கலைக்கழகங்களாக மாற்றும் மசோதாவை தான் ஆதரிப்பதாக இறுதியில் குறிப்பிட்டார்.