தமிழகத்தில் வரும் 18 ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுக கூட்டணி சார்பில் தேனி தொகுதியில் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். இது தவிர அமமுக சார்பில் தங்க தமிழ்செல்வனும் களம் இறங்கியுள்ளார்.

இந்நிலையில் சோழவந்தான் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருவேடகம், மேலக்கால், கச்சிராயிருப்பு, மேலமட்டையான், தென்கரை, முள்ளிப்பள்ளம் பகுதிகளில் ஓ. ரவீந்திரநாத்குமார் வாக்குச் சேகரித்தார். அவருடன் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், மாணிக்கம் எம்எல்ஏ உட்பட பலர் சென்றனர். கிராமங்களில் பெண்கள் ஆரத்தி எடுத்தும், காளைகளுடனும் வரவேற்பு அளித்தனர். 

அப்போது பேசிய அமைச்சர் உதயகுமார் இத்தொகுதியில் போட்டியிடும்  ஈரோட்டுக்காரரும், சுயேச்சையும் தேர்தல் முடிந்ததும் ஓடி விடுவார்கள் என தெரிவித்தார்..

இப்பகுதி மக்களின் குறைகளைத் தீர்க்கும் தகுதி பெற்ற ஒரே வேட்பாளர் ப.ரவீந்திரநாத்குமார் தான். அவரது தந்தை துணை முதலமைச்சர்  ஓ.பன்னீரசெல்வம்தான் ஜல்லிக்கட்டை மீட்டெடுத்தார். மதுரைக்கு எய்ம்ஸ் அனுமதி பெற்றுத் தந்தார். வேளாண்மைக்கு தேவைப்படும் போதெல்லாம் தண்ணீர் கொண்டுவந்தது என பல திட்டங்களை நிறைவேற்றினார் என குறிப்பிட்டார்

பிரதமருடன் இருக்கும் நெருங்கிய நட்பால் தேனிக்கு முக்கியத் திட்டங்களை எளிதில் கொண்டு வருவார் என கூறிய உதயகுமார், பாஜக மத்தியில் ஜெயித்து ஆட்சியமைக்கும்போது ரவீந்திர நாத்குமார் மத்திய அமைச்சராவார் என தெரிவித்தார்.