Ration shop statement

ஏழை எளிய மக்களைக் குறித்து கொஞ்சமும் கவலைப்படாத பினாமி அரசு… ஓபிஎஸ் கடும் தாக்கு..

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழகத்தில் உள்ள ஏழை மக்களை பற்றி, சிறிதும் கவலைப்படாத அரசாக, பினாமி தமிழக அரசு இருப்பதாக ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்மைக்காலமாக நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல், பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுவதாகவும் இந்த நிலைமையைக் கண்டு தான் மிகுந்த வேதனை அடைவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பெரிதாக நம்பியிருக்கும், ரேஷன் கடைகள் சரியாக இயங்கவில்லை என்றும் அத்தியாவசியப் பொருட்கள் சரிவர கிடைக்கவில்லை எனவும் , பாதிக்கப்பட்ட பொது மக்கள் புகார் அளித்து வருவதாக ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு மாதமாக, அத்தியாவசியப் பொருட்களை கொள்முதல் செய்வதில், தற்போதுள்ள, பினாமி அரசு காலதாமதத்தை ஏற்படுத்தி, கடும் தட்டுப்பாட்டை உருவாக்கி உள்ளது என்றும் ஓபிஎஸ் குறிப்பிட்டுள்ளார்.

 பருப்பு, பாமாயில் போன்ற, அத்தியாவசியப் பொருட்கள், ரேஷன் கடைகளில் அறவே கிடைக்கவில்லை என்றும் பொதுமக்கள், நீண்ட நேரம் ரேஷன் கடைகளின் முன் காத்து கிடந்து, ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆட்சி காலங்களில், ரேஷன் கடைகளில், அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு என்றைக்குமே இருந்தது இல்லை என்றும், ஆனால் தற்போதைய பினாமி அரசு, ஏழை மக்களை பற்றி சிறிதும் கவலைப்படாமல், பொது வினியோகத் துறையை பலவீனப்படுத்தி வருவதாகவும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

ஏழை எளிய மக்களின் துயரை தீர்க்கும் வகையில், அரசு மெத்தனப்போக்கை கைவிட்டு, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது