ration rice denied to families who did not link aadhaar with ration card
கர்நாடக மாநிலத்தில் குடும்ப அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்காததால், தலித் சமூகத்தை சேர்ந்த 22 குடும்பத்தினர் ரேஷன் அரிசி கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
அரசின் பல்வேறு நலத்திட்டங்களை பெற, மத்திய அரசு ஆதாரை கட்டாயமாக்கி வருகிறது. சிலிண்டர் மானியம், மதிய உணவுத் திட்டத்தின் கீழ் மாணவர்கள் மதிய உணவை பெற என பல்வேறு திட்டங்களுக்கு ஆதாரை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. மொபைல் எண், பான் எண், வங்கிக் கணக்கு ஆகியவற்றுடனும் ஆதாரை இணைக்க வேண்டும் என மத்திய அரசு ஆணையிட்டுள்ளது.
அரசின் நலத்திட்ட சலுகைகளைப் பெற ஆதாரை கட்டாயமாக்க கூடாது என உச்சநீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டும், மத்திய அரசு அதை கண்டுகொள்ளவில்லை. ஆதார் தொடர்பான பல்வேறு வழக்குகளை உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.
ஆனால், இதற்கிடையே ஆதார் எண்ணை இணைக்காததால், நாடு முழுவதும் பல சலுகைகளை பெற முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். அப்படியான ஒரு அவலம் கர்நாடகாவிலும் அரங்கேறியுள்ளது.
கர்நாடக மாநிலம் சிக்கபல்லாபுரா மாவட்டத்தில், சிந்தாமணி காலனியில் 47 தலித் குடும்பங்கள் வசித்து வருகின்றன. வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள இவர்களுக்கு மாதந்தோறும் ரேஷன் கடைகளில் இலவச அரிசி வழங்கப்படுகிறது.
இதில் 22 குடும்பங்களை சேர்ந்தவர்கள் தங்களது குடும்ப அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை எனக்கூறி அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச அரிசி நிறுத்தப்பட்டுள்ளது. கடுமையான வறுமையில் வாடும் அவர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் இலவச ரேஷன் அரிசி தான் ஒரே உணவாதாரம். இந்நிலையில், ஆதார் எண்ணை இணைக்காததை காரணம் காட்டி அதுவும் நிறுத்தப்பட்டுள்ளதால் உணவின்றி தவித்து வருகின்றனர். பசியாற்ற வேறு வழியில்லாமல், அப்பகுதியில் கிடைக்கும் கிழங்குகளை சாப்பிட்டு பசியாற்றி வருகின்றனர்.
ஆதார் எண் பெறுவதற்கு போதுமான ஆவணங்கள் அவர்களிடம் இல்லாத காரணத்தால், இந்த பிரச்னை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வட்டாட்சியரிடம் பல மாதங்களாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததை அடுத்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் இறங்கினர். அவர்களுக்கு ஆதரவாக அருகில் உள்ள கிராம மக்களும் திரண்டனர். போராட்டம் பெரிய அளவில் நடைபெற்றதையடுத்து அவர்கள் பிரச்னைக்கு தீர்வு காண அரசு முன் வந்துள்ளது. முதல்கட்டமாக அவர்களுக்கு அரிசி வழங்கியுள்ளது. மேலும், உடனடியாக ஆதார் எண் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
