அண்மையில் நடைபெற்ற ஆந்திர மாநில சட்டமன்றத் தேர்தலில் ஜெகன் மோகன் தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. ஜெகன் மோகன் கடந்த வாரம் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடன் 5 துணை முதலமைச்சர்கள்  உட்பட 25 அமைச்சர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இந்நிலையில் ஜெகன் மோகன் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்  ரேஷன் பொருட்கள் அனைத்தும் பயனாளிகள் வீட்டிற்கே சென்று தன்னார்வலர்கள் மூலமாக வழங்கப்படும் எனவும், அரசு ஊழியர்களுக்கான புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்யவும் முடிவு செய்யப்பட்டது. 

கூட்டத்திற்கு பிறகு பேசிய செய்தி மற்றும் தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பேரணி நானே கடந்த 5 ஆண்டுகளில் அந்தந்த அமைச்சரவை துறைகளில் என்னென்ன பணிகள் நடைபெற்று உள்ளது. செய்யப்பட்ட பணிகளில் ஊழல். முறைகேடுகள். தவறுகள் நடைபெற்றுள்ளதா என்பதை பரிசீலிக்க அந்தந்த துறை செயலாளர்கள், அமைச்சர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என தெரிவித்தார்.

முதலமைச்சர்  முதல் கிராமத்தில் உள்ள அதிகாரிகள் வரை யாரும் ஊழல் செய்யக்கூடாது என்பதே ஜெகன் மோகனின்  முக்கிய நோக்கம். ஊழல் இல்லாத மாநிலம் அமைக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.


.
ரேஷன் கடைகளில் தற்போது வழங்கக்கூடிய அரிசி தரமற்ற நிலையில் உள்ளதால் அதனை வாங்க கூடிய பொதுமக்கள் ஒரு கிலோ ரூ.6 முதல் ரூ.10க்கு வெளியில் விற்கக் கூடிய நிலை ஏற்படுகிறது. 

அதனை கள்ளச்சந்தையில் பெறுபவர்கள் பாலிஷ் செய்து மீண்டும் விற்பனைக்கு கொண்டு வரக்கூடிய நிலை உள்ளது. எனவே இதுபோன்ற நிலை அல்லாமல் அரசு அதிகாரிகள் நடுத்தர மக்கள் சாப்பிடக்கூடிய வகையில் இருக்கக் கூடிய அரிசியை அரசே கொள்முதல் செய்து அதனை 5 முதல் 15 கிலோ பாக்கெட்களாக கிராம தன்னார்வலர்கள் மூலமாக வீட்டிற்கே கொண்டு சென்று பயனாளிகளுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் அமல்படுத்த முதலமைச்சர்  உத்தரவிட்டுள்ளார்.

விவசாயிகளுக்கு 9 மணி நேர மின்சாரத்தை இலவசமாக வழங்க பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும்  , அரசு ஊழியரின் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்யவும், ஜெகன் மோகன் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் பேரணி நானே தெரிவித்தார்.