டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் அந்த அமைப்பின் முதல் இயக்குநர் டி.பி.கோலியை நினைவு கூரும் வகையில் டி.பி.கோலி நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது. டி.பி.கோலி நினைவாக அவ்வப்போது கருத்தரங்கு நடைபெறும். 

இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் டி.பி.கோலி நினைவகத்தில் நேற்று  நடைபெற்ற 18-ஆவது ஆண்டு கருத்தரங்கில் சிறப்பு அழைப்பாளராக ரஞ்சன் கோகோய் கலந்து கொண்டு பேசினார்.


அப்போது, அரசியல் தலையீடு மற்றும் சமூகத்தில் உள்ள மிகப்பெரிய நபர்கள் தொடர்பான வழக்குகளில் சில சமயங்களில் சிபிஐ அதிகாரிகள் முறையாக விசாரணை நடத்தவில்லை என்பது எதார்த்தமான உண்மை. ஆனால் இது மாதிரி அடிக்கடி நிகழவில்லை என்பதும் உண்மைதான் என குறிப்பிட்டார்.
.
வழக்குகளுக்கு சரியான தீர்ப்பு கிடைக்காத சமயங்களில் சிபிஐ நிர்வாகத்தில் உள்ள குறைபாடுகள் வெளியில் தெரிய வரும். இவை சிபிஐ.யின் நம்பிக்கையையும், கட்டமைப்பையும் பாதித்துவிடும் என கோகாய் கடுமையாக பேசினார்.

சிபிஐ அமைப்பில் உள்ள நிறை மற்றும் குறைகளை எடுத்துரைப்பதால் எவ்வித மாற்றமும் நிகழப்போவதில்லை என சிபிஐ செயல்பாடுகள் குறித்த விமர்சனங்களை முன்வைத்ததுடன் அதைக் கடந்து முன்னே செல்வதற்கான அறிவுரைகளையும் வழங்கியவர் நீதியை நிலைநாட்டுவதற்காக சிபிஐ தொடர்ந்து செயலாற்ற வேண்டும் என தெரிவித்தார்.

அரசியல் தலையீடு சார்ந்த வழக்குகளில் சிபிஐ நீதித்துறையின் விசாரணைக்கு ஏற்றபடி வழக்குகளை வலுப்படுத்த முடியவில்லை என்பது உண்மைதான் என்றாலும், அரசியல் தலையீடு இல்லாத வழக்குகளில் மட்டும் சிபிஐ சிறப்பாக செயல்படுவது ஏன்? என்று அவர் கேள்வியெழுப்பினார்.