ராணிப்பேட்டை திமுக எம்எல்ஏ காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும், தொடர்ந்து பாதிப்பு அதிகரித்துக்கொண்டுதான் உள்ளது. அதேபோல நலத்திட்ட உதவிகள், நிவாரணப் பணிகள் என களத்தில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் தொற்று உறுதியாகிறது. அமைச்சர்கள் தங்கமணி, நிலோபர் கபில் ஆகியோர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர். செல்லூர் ராஜு, கே.பி.அன்பழகன் ஆகியோர் நலம்பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் திட்டக்குடி எம்எல்ஏவும்,கடலூர் மேற்கு மாவட்ட திமுக செயலாளருமான சி.வெ.கணேசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னை போரூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுபோலவே கிருஷ்ணகிரி தொகுதி திமுக எம்.எல்.ஏ செங்குட்டுவன் மற்றும் வேலூர் திமுக எம்எல்ஏ கார்த்திகேயனுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

இந்நிலையில், ராணிப்பேட்டை எம்எல்ஏ காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் எம்எல்ஏ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே சேப்பாக்கம் தொகுதியைச் சேர்ந்த ஜெ. அன்பழகன் கொரோனா தொற்றால் உயிரிழந்த நிலையில். செஞ்சி மஸ்தான், ரிஷிவந்தியம் வசந்தம் கார்த்திகேயன், செய்யாறு ஆர்.டி. அரசு ஆகியோர் சிகிச்சைக்குப் பின் குணமடைந்தனர். இந்நிலையில், தற்போது மேலும் 4 எம்எல்ஏக்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.