ramasubramian removed from bjp tamilisai announced

பூவே உனக்காக படத்தில் இரவு 8 மணி ஆனதும் அந்த கிராம மக்கள், முதியவர் பாடும் பாட்டிற்கு பயந்து வீட்டிற்குள் சென்று கதவை பூட்டிடுவாங்க.. அதேபோல இரவு 8 மணி ஆகிவிட்டாலே செய்தி சேனல்களில் நடக்கும் விவாதங்களை கண்டு மக்கள் தெறிக்கின்றனர்.

நேற்று கட்சி சார்பில் விவாதத்தில் கலந்துகொண்டவர் இன்று கல்வியாளர் என்று கலந்துகொள்வாரே..? யார் என்ன அவதாரம் எடுக்கப்போகிறார்களோ என்று பதறும் அளவுக்கு ஒரே நபர் பல அவதாரங்கள் எடுப்பதும்.. ஆக்கப்பூர்வமாக பேசுவதை விட அடித்துக்கொள்வதை பிரதானமாக வைத்துக்கொள்வதும் தான் விவாதங்களை கண்டு மக்கள் அஞ்ச பிரதான காரணம்.

அந்த வகையில், பல அவதாரங்கள் எடுப்பதற்கு பெயர் போனவர் பாஜகவின் ராமசுப்பிரமணியன். இவர் விவாத நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டாலே வாக்குவாதத்திற்கும் மோதலுக்கும் பஞ்சமே இருக்காது. 

இவர் விவாத நிகழ்ச்சிக்கு வந்துவிட்டால் 8 மணிக்கு மேல் மக்களை மகிழ்விக்கும் பொறுப்பை தன் கையில் எடுத்துவிடுவார். மாற்று கருத்து உள்ளவர்களையும் மற்ற கட்சியினரையும் தெறிக்கவிடுவார். மாற்று கட்சியினருடன் சண்டைக்கு சென்று விவாதத்தை பாதியில் நிறுத்த வல்லவர்.

பாஜக, மோடி ஆதரவாளர், கல்வியாளர், உயர்கல்வி ஆர்வலர், சமூக ஆர்வலர், பொருளாதார நிபுணர், இறை பக்தர் என அந்தந்த விவாதத்தின் கருப்பொருளுக்கு ஏற்றவாறு அவதாரம் எடுப்பார் ராமசுப்பிரமணியன்.

சிவாஜி, கமலை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு, எந்த வேடம் ஏற்றாலும் அந்த கதாபாத்திரமாகவே மாறி, மாற்று கருத்துடையோரை கதறவிடுவார் ராமசுப்பிரமணியன். நெறியாளரையும் சேர்த்தே திணறவைத்துவிடுவார்.

கமெர்சியல் சேனல்கள், திரைப்படங்களை கடந்து செய்தி சேனல்கள் வாயிலாகவும் மக்களை மகிழ்விக்க முடியும் என்பதை நிரூபித்து காட்டியவர். மீம்ஸ் கிரியேட்டர்ஸ்களுக்கு இவர்தான் சிறந்த தீனி. ஒருவர் ஒரு மீமை பார்த்த உடனேயே ரசிக்கும் அளவுக்கு ஒரு மீமை உருவாக்க நினைத்தால் ராமசுப்புவை வைத்து மீம் உருவாக்கிவிடுவர்.

இப்படியாக, செய்தி சேனல்கள், மக்கள், மீம் கிரியேட்டர்ஸ் என பலதரப்பையும் மகிழ்வித்த ராமசுப்பிரமணியன், பாஜகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். கட்சியையும் கட்சி தலைவர்களையும் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் அவதூறாக பேசிவருவதால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவதாக பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அறிவித்துள்ளார்.

இதனால் ராமசுப்புவுக்கு பாதிப்பில்லை. கட்சியிலிருந்து நீக்கப்பட்டதன் மூலம் பாஜக, மோடி ஆதரவாளர் என்ற இரு வேடங்களை மட்டுமே ராமசுப்பு இழந்துள்ளார்.

இறை பக்தர், கல்வியாளர், பொருளாதார நிபுணர் என்ற மற்ற வேடங்களை ஏற்று தொடர்ந்து மக்களை மகிழ்விப்பார் என எதிர்பார்க்கலாம்..