சர்வதேச அரசியல் ஆளுமையாக பார்க்கப்படும் மோடி, சொந்த நாட்டில் வெகு சாதாரண அரசியல்வாதி போல் நடந்து கொள்வதாக சொந்த கட்சியின் சீனியர்கள் வட்டத்திலிருந்தே விமர்சனங்கள் வெடிக்கின்றன. 

விவகாரம் இதுதான்...அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும்! என்பதுதான் பி.ஜே.பி.யை  இந்த நாட்டில் தேசிய அரசியல் இயக்கமாக்கிய முக்கிய அஜெண்டா. இதை வலுவாக சொல்லிச் சொல்லித்தான் கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில் முரட்டுப் பெரும்பான்மையை பெற்றது பி.ஜே.பி. தாமரை ஆட்சியில் அமர்ந்ததும், ராமர் கோயில் எழும்ப துவங்கிவிடும் என்று நம்பினர் தேசத்தின் தீவிர இந்துப்பிரியர்கள். 

அவர்களை மேலும் நம்ப வைத்திடும் வகையில், இந்துக்கள் புனிதமாக நினைக்கும் கங்கையை சுத்தப்படுத்த தனி துறையையே உருவாக்கி, அதற்கு முன்னாள் முதல்வர் உமாபாரதியையே அமைச்சராக்கினார் மோடி. ஆக இந்த சூழல்கள் அத்தனையும் ‘ராம ராஜ்யம் அமைகிறது’ என்று தான் அதன் அடியவர்களின் மனதில் நம்பிக்கை தீபத்தை ஏற்றியது. 

ஆனால், நான்கரை ஆண்டுகளைக் கடந்து விட்டது மோடியின் அரசு. இன்னும் ஐந்தரை மாதங்களில் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் வர இருக்கிறது. ஆனால் அப்படி எந்த அறிகுறியும் நிகழவில்லை. ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்று சொல்லப்படும் அயோத்தியானது பி.ஜே.பி. ஆளும் மாநிலம்தான். இதன் முதல்வரான யோகி ஆதித்யநாத் ஒரு சாதுவும் கூட. இந்துத்வத்தை வலிமையுற செய்வதற்காக, உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலையே பலிகொடுக்க தயங்காதவர் எனும் பெயரெடுத்த யோகியும் ராமர் கோவிலை கட்டிட எந்த முன்னெடுப்பையும் மேற்கொள்ளவில்லை. 

இப்படியான நிலையில், நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆதார பணிகள் துவங்கிவிட்ட நிலையில் இதோ இப்போது கிளர்ந்தெழுந்துள்ளது ’ராமர் கோயிலை உடனே கட்டுக’ எனும் கோரிக்கை. விஸ்வ இந்து பரிஷத் சார்பில் அயோத்தியில் நேற்று ‘தர்மசபா’ எனும் பேரணி நடைபெற்றது. ஆர்.எஸ்.எஸ். மற்றும் சிவசேனா உள்ளிட்ட அமைப்புகள் ஆதரவளித்த இந்த பேரணியில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர். 

”பி.ஜே.பி.யின் ஆட்சியில் இன்னும் ஒரேயொரு கூட்டத்தொடர்தான் நாடாளுமன்றத்தில் பாக்கி இருக்கிறது. எனவே ராமர் கோயில் கட்டுவதற்கான அவசர சட்டத்தை மத்தியரசு கொண்டு வரவேண்டும் உடனே. கோயிலை கட்டாவிட்டால் பி.ஜே.பி. மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது.” என்று உறுமியுள்ளார் சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்ரே. 

ஆனால் இந்த திடீர் பேரணிக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்பது போல் காட்டியிருக்கிறது தேசத்தை ஆளும் பி.ஜே.பி. அரசு. 
ஆனால் இதை ஏற்க மறுக்கும் அரசியல் விமர்சகர்களோ ”2014 தேர்தலில் அசுரத்தனமான வாக்குறுதிகளை அள்ளிவீசினார் மோடி. இவர் வந்தால் தேசம் தலைகீழாக மாறிவிடும் என்று நினைத்து மக்களும் அவரது அரசை கொண்டு வந்தனர். ஆனால் துளியும் தேறவில்லை தேசம். நாடெங்கிழும் மோடிக்கு எதிரான அலை கடுமையாக வீச துவங்கியுள்ளது. 

இந்நிலையில் விழித்தெழுந்திருக்கும் மோடி, மீண்டும் வெற்றி பெற வேண்டும் எனும் எண்ணத்தில் பழைய பல்லவியான ‘அயோத்தியில் ராமர்  கோயில்’ எனும் கோரிக்கையை உசுப்பிவிட்டுள்ளார். இதன் மூலம் இந்துக்கள் தன்னையே மீண்டும் ஆதரிப்பர் எனும் எண்ணம் அவருக்கு. ஆனால் என்னமோ இந்த பேரணிக்கு பின்னணியில் தாங்கள் இல்லாதது போல் அவர் காட்டுவதை யாரும் நம்பிட தயாரில்லை. உத்தவ் தாக்கரே பி.ஜே.பி.யை மிரட்டுவது போல் பேசியிருப்பதும் வெறும் நாடகமே. காரணம், பி.ஜே.பி. வீழ்ந்துவிட்டால் சிவசேனாவால் பெரிதாய் கோலோச்ச முடியாது. 

ஆகவே மோடிக்கு தேர்தல் நேரத்தில்தான் தெய்வமான ராமரே கண்ணில் தெரிந்திருக்கிறார். இந்த தேர்தலையும் ராமரை வைத்தே ஓட்டப்பார்க்கிறார்கள்.” என்று வெளுத்துள்ளனர். விமர்சகர்களின் இந்த கூற்றினை ‘உண்மை! உண்மை!’ என்று பி.ஜே.பி. சீனியர்களும் ஏற்றிருப்பதுதான் அதிர்ச்சி கலந்த ஆச்சரியம்.